பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், ‘கலைஞர் உரிமைத் தொகை’ திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இரண்டாவது மாத உதவித் தொகை அக்டோபர் 15 ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாளை (அக்டோபர் 14) அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இப்படி மகளிர் உரிமைத் தொகை ஒரு பக்கம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,
இன்னொரு பக்கம் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான பணிகள் தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் வட்ட வழங்கல் அலுவலகங்களில் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர், உணவு வழங்கல் ஆணையர், நாகை கலெக்டர் ஆகியோருக்கு நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் என்.பி. பாஸ்கரன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வட்ட வழங்கல் அலுவலகத்திலும் கடந்த சில மாதங்களாக குறைந்தபட்சம் 500 புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டால் சுமார் ஒரு லட்சம் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் இருக்கலாம்.
விண்ணப்பித்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சென்று கேட்டால், ‘கலைஞர் உரிமைத் தொகைப் பணிகளுக்காக புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை லாக் செய்து வைத்திருக்கிறார்கள், சீக்கிரம் வழங்கப்பட்டுவிடும்’ என்று அதிகாரிகள் பதில் அளிக்கிறார்கள்.
இதனால் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் வேதனையடைந்திருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் இதுகுறித்து உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முதல்வர் கவனிக்க வேண்டும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
’இன்னொரு பாலச்சந்தர்’: சித்தா படக்குழுவுக்கு திருச்சி சிவா பாராட்டு!
எடப்பாடி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!