வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்!

Published On:

| By Selvam

93 வயதான வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வின் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (அக்டோபர் 10) அதிகாலை காலமானார்.

1928ஆம் ஆண்டு பிறந்த சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுகுளத்தை சேர்ந்தவர். சென்னை கே.கே.நகர் பகுதியில் அவரது மகள் பாரதியுடன் வசித்து வந்தார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உதவியால் சென்னைக்கு வந்து தனது இசைப்பணியை தொடங்கினார்.

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் 19 படங்களிலும், நாகேஷின் 60-க்கும் மேற்பட்ட படங்களிலும் நகைச்சுவை வசனங்களை எழுதியுள்ளார்.

அவரது அயராத இசைப்பணி காரணமாக, வில்லிசை வேந்தர் என்று அழைக்கப்பட்டார்.

சுப்பு ஆறுமுகத்தின் இசைப்பணியை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருதும், தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது.

2005ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.

வில்லிசை மகாபாரதம், வில்லிசை ராமாயணம், நீங்களும் வில்லுப்பாட்டு எழுதலாம் உள்ளிட்ட மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் அவரது மறைவு திரை பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது இரங்கல் செய்தியில், “வில்லுப்பாட்டு கலைஞர்,பத்மஸ்ரீ, கலைமாமணி திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் வில்லுப்பாட்டை கொண்டு சேர்த்தவர். தேசபக்தி மற்றும் ஆன்மீகப் பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

அவரது திறமையை பாராட்டி மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு அவருக்கு 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

அவர் என்மீது தனிப்பட்ட அன்பும்,பாசமும் கொண்டிருந்தார். வில்லிசை வேந்தரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு குறிப்பாக சகோதரி, திருமதி.பாரதி திருமகன், பேரன் திரு.கலைமகன், அவரது மனைவி திருமதி.மகாலட்சுமி அவர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்ககத்தில் பணி!

திரைபடங்களை விட இசை துறை வளர வேண்டும் : கமல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel