குட்கா விற்பனை: இந்து முன்னணி தலைவர் கைது!

தமிழகம்

சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை விற்றதற்காக இந்து முன்னணி அமைப்பின் தலைவர் இன்று (அக்டோபர் 4) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சேலம் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 30க்கும் மேற்பட்டோரை சேலம் மாநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

தவிர, பெங்களூருவிலிருந்து இந்த போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு தமிழகத்துக்குக் கொண்டுவருவதாக தகவல் வந்ததையடுத்து, சேலம் ஓமலூர் அருகே சோதனைச் சாவடி அமைத்து அவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களைப் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

மேலும், கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில்தான் நேற்று (அக்டோபர் 3) மாலை அம்மாபேட்டை, பொன்னம்மா பேட்டை பகுதிகளில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியாக வந்த சிகரெட் சப்ளை செய்யும் ஸ்ரீதர் என்பவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அவரிடம் 8 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து ஸ்ரீதரைக் கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், சேலம் பொன்னம்மாபேட்டையில் மளிகைக்கடை நடத்திவரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து தாம் பெற்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் தலைவர் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியும், ஸ்ரீதரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலத்தில் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ஒருவரே தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

15 மாவட்டங்களில் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

காங்கிரஸ் தேர்தல்: விமர்சித்த பாஜவுக்கு சிதம்பரம் பதிலடி!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1