தமிழ்நாட்டை உலுக்கும் போதைப் பொருள்: கடல் தாண்டிய நெட்வொர்க் முதல் போலீஸ் கறுப்பு ஆடுகள் வரை!

போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், தான் நடத்துகிற ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆணையிட்டு வருகிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகி வருவது குறித்து தினந்தோறும் செய்தித் தாள்களில் வரும் செய்திகள் மக்களை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில்தான், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் உள்ளிட்ட இளைஞர்கள் போதை மருந்து தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சமூகத்தில் நன்கு அறியப்பட்ட நடிகர்களோ நடிகர்களின் குடும்பத்தினரோ போதைப் பொருள் வழக்கில் கைதாகும் போது மக்களுக்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது.

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு காரணமாக கைதான பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்ளிட்ட 7 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்களோடு இந்த நெட்வொர்க் முடிந்துவிடவில்லை என்று போலீஸுக்கு நன்றாகத் தெரியும். அதனால் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

வாரா வாரம் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்படும் கஞ்சா வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் குறையவில்லை. முதல்வர் ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளை வைத்து நடத்தும் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் போதைப் பொருட்கள் தடுப்பு பற்றித்தான் அழுத்தம் திருத்தமாக பேசுகிறார்.

இப்படி இருந்தும் போதைப் பொருட்கள் புழக்கத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? எங்கிருந்து இந்த வஸ்துகள் இங்கே இவ்வளவு தாராளமாக கிடைக்கின்றன.

ஒருபக்கம் உளவுத்துறை மிக ரகசியமாக இதுகுறித்து விசாரித்து வருகிறது. இன்னொரு பக்கம் டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோரும் போதைப் பொருட்களின் வேர்களைத் தேடி விசாரணையை முடுக்கியுள்ளனர்,.

நாம் இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் போதைப் பொருட்களின் புழக்கம் உடனுக்குடன் அப்டேட் ஆகி வருகிறது.

எஸ்எஸ்டி போதை ஸ்டாம்ப், எம்டிஎம் போதை மாத்திரை, கஞ்சா, பெத்தமின் என போதைப் பொருட்களின் வடிவமும் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் பல பல முறையில் மாறி வருகின்றது.

சென்னை மாநகரத்தின் முக்கிய ஹோட்டல்களில் ரூம் எடுத்து கூட்டம் கூட்டமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்பாடும் நடந்து வருகிறது. பெரிய பெரிய ஹோட்டல்களில் தொடங்கும் இந்த சப்ளை சின்னச் சின்ன பூங்காக்களை கிளை விற்பனை நிலையங்களாக மாற்றி வைத்திருக்கின்றன.

இப்படிப்பட்ட கண்காணிப்பில்தான் டிசம்பர் 3 ஆம் தேதி ஜெ.ஜெ. நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இ.பி.பூங்காவில் கஞ்சா புழக்கம் அதிகம் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அப்படித்தான் அந்த பூங்காவில் 3 பேரை கைது செய்தனர். அவர்களின் மொபைல் நம்பரில் இருக்கும் தொடர்புகளை விசாரித்து… மன்சூர் அலிகான் மகன் துக்ளக், புதுப்பேட்டை யோகேஷ், பாசில் அகமது, முகமது ரியாஸ், சையது சிராஜ், குமரன், சந்தோஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பின்னால் இருப்பது யார், அவர்களின் இருப்பிடம் தமிழ்நாடு தாண்டி இந்தியாவுக்குள் இருக்கும் வேறு மாநிலங்களா? அல்லது வெளிநாடா என்ற விசாரணையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், தெற்கு அடிஷனல் கமிஷனர் கண்ணன், வடக்கு அடிஷனல் கமிஷனர் நரேந்திரன் நாயர் என மூன்று முக்கிய அதிகாரிகளும் தீவிரமாக ஆலோசனை மற்றும் ஆபரேஷன் நடத்தி வருகிறார்கள்.

நரேந்திர நாயரின் கீழ் இணை ஆணையர் டாக்டர் விஜயகுமார் தனி டீம் போட்டு தொழில்நுட்ப உதவியோடு போதைப் பொருள் சப்ளையின் வேர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே போலீஸார் நடத்திய விசாரணையில் போலீசாருக்கே அதிர்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது. சென்னை மாநகரத்தின் கஞ்சா புழக்கத்தை போலீஸார் நினைத்தால் என்றைக்கோ ஒழித்துக் கட்டியிருக்க முடியும்.

ஆனால் கஞ்சா விற்பனை மூலம் போலீஸாரின் கல்லா நிரம்புவதால்தான் இன்றுவரை கஞ்சா விற்பனையாளர்கள் அஞ்சாமல் தங்கள் அட்டூழியங்களை தொடர்கிறார்கள். இதையடுத்து போலீஸுக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகள் யார் என்ற விசாரணையில்தான் இரு கறுப்பு ஆடுகள் சிக்கியிருக்கிறார்கள்.

சென்னை வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி சினிமா புள்ளிகள், பிசினஸ் புள்ளிகள் அதிகம் புழங்கும் பகுதி. இங்கே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருந்தபோதும் போலீஸ் நடவடிக்கை பெரிய அளவில் இல்லை. ஏன் இந்த விசித்திர விபரீதம் என்று போலீஸ் உயரதிகாரிகளின் வேட்டையில் சிக்கியிருக்கிறார் ஏட்டு ஜேம்ஸ்.

ஜேம்ஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் GRINDR APP என்ற செயலியை தனது மொபைலில் வைத்திருக்கிறார். இந்த ஆப் மூலமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் சந்தித்துக் கொள்வதும் டேட்டிங் செய்வதும் நடந்து வருகிறது.

இந்த செயலியில் இணைந்த ஜேம்ஸ், ஏற்கனவே இந்த செயலியை பயன்படுத்தும் பலரையும் போதைப் பொருள் பழக்கமும் ஒருங்கிணைத்திருப்பதை கண்டறிந்திருக்கிறார்.

இதை வைத்து போதைப் பொருள் நெட்வொர்க்கை பிடிக்கலாம் என்ற வாய்ப்பிருந்தபோதும், இதை வேறு வகையாக விபரீதமாக பயன்படுத்தியிருக்கிறார் ஜேம்ஸ்.

இந்த ஆப்பில் மெம்பராக இருக்கும் பலர் போதைப் பொருள் பயன்படுத்துவதை உறுதி செய்துகொண்டு, அவர்களை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கிய ஜேம்ஸ்…ஒரு கட்டத்தில் போதைப் பொருள் சப்ளைக்கும் உதவியிருக்கிறார் என்று அறிந்து போலீசாரே அதிர்ந்துவிட்டனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதேபோல அயனாவரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் பரணியும் போதைப் பொருள் கும்பலோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவே அதிர்ச்சி என்றால் இதைவிட பேரதிர்ச்சி தரும் இன்னொரு விவகாரமும் நடந்திருக்கிறது.

காக்கி சட்டை போட்டுக் கொண்டே கஞ்சா கும்பலோடு தொடர்பில் இருந்த இருவரின் போன் தொடர்புகள், அவர்களுடைய கால் டீடெயில்ஸ் பற்றி ஆராய்ந்தபோதுதான், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau) அதிகாரிகளோடும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது,

ஒரே நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கும்பலோடும் தொடர்பு… இன்னொரு பக்கம் இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக துடைத்து எறிய வேண்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளோடும் தொடர்பு என்பது எவ்வளவு பெரிய விசித்திர விபரீதம்!

தமிழக அரசில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள்தான் டெப்டேஷனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு செல்வார்கள். இந்நிலையில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பாக நடத்தப்படும் சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களே, இந்த கீழ் நிலை அதிகாரிகள் மூலமாக போதைப் பொருள் கும்பலுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைக்க ஆடிப் போயிருக்கிறார்கள் தமிழக போலீஸ் உயரதிகாரிகள்.

இன்னொரு பக்கம் நைஜிரீயா, செனகல், கேமரூன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து மாணவர்கள் இந்தியாவில் வந்து உயர் கல்வி பயில வருகின்றனர். இந்த நாடுகளைப் போன்ற பின் தங்கிய நாடுகளின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்லூரிக் கல்வி பயில மானியத்தோடு தாயுள்ளத்தோடு உதவி செய்கிறது இந்திய அரசு.

இந்நிலையில் பெங்களூரு, கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் கல்லூரிப் படிப்புக்காக நமது இந்திய அரசின் மானிய உதவியோடு வரும் மாணவர்களில் சிலரை, போதைப் பொருள் கும்பல் தங்கள் வசப்படுத்தி அவர்களை போதை பொருள் சப்ளை செயினில் ஒரு அங்கமாக ஆக்கிவிடுகிறார்கள். இந்த கும்பல் தமிழ்நாட்டுக்குள்ளும் ஊடுருவியிருக்கிறது.

இப்படி இந்தியாவில் தங்கிப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விசா அனுமதி முடிந்துவிட்டதா, விசா காலம் முடிந்தும் இங்கேயே இருக்கிறார்களா, அப்படியென்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் போன்ற விசாரணைகளை இந்திய அரசு அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்” என்று பெருமூச்சுவிட்டார்கள் காவல் துறை வட்டாரத்திலேயே.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் மட்டுமல்ல, அந்த நெட்வொர்க்கும் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கும் நிலையில்… எதிர்த்துப் போராடும் அரசுத் தரப்பும் அதே அளவு விரிவான, ஆழமான விசாரணையையும் வேகமான களையெடுத்தல்களையும் செய்ய வேண்டியிருக்கிறது!

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘புஷ்பா 2’ பார்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… அல்லு அர்ஜூன் செய்த உதவி!

திருமாவுக்கு கூட்டணி கட்சிகள் பிரஷர்… விஜய்யின் பேச்சுக்கு விசிக எதிர்ப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts