புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகள்: கோடிக்கணக்கான  லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படும் அபாயம்!

தமிழகம்

“புதுச்சேரியில் தற்போது உள்ள மதுபான ஆலைகளால் தினசரி 2.5கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தால் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படும்” என பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மது வகைகளுக்கு புகழ்பெற்ற புதுச்சேரியில் தற்போது ஐந்து மதுபான தொழிற்சாலைகளும், ஒரு பீர் தொழிற்சாலையும் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் மாநில அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு முடிவெடுத்திருக்கும் புதுவை கலால் துறை, கடந்த மே மாதம் புதிய மதுபான தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி விண்ணப்பங்களும் பெறப்பட்டது.

இந்த நிலையில் தட்டாஞ்சாவடி தாகூர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுஊழியர் கோபால் என்பவர் மதுபான தொழிற்சாலைகளுக்கு எதிராக சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் “புதுச்சேரியில் தற்போது தினசரி 2.5கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தால் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படும்.

அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், கடல் நீரும் உள்ளே புகுந்துவிடும்.

எனவே புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அத்துடன் கலால் துறை அறிவிப்புக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி புஷ்ப சத்தியநாராயணன், உறுப்பினர் சத்தியகோபால் கோரலப்பட்டி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய மாநில நிலத்தடி ஒழுங்குமுறை சட்டவிதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

எனவே புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைகள் அனுமதிப்பது தொடர்பான அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதையடுத்து வழக்கு விசாரணையை நாளை (டிசம்பர் 19-ம் தேதிக்கு) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

-ராஜ்

சிறப்புத் திட்டத் துறையின் செயல்பாடுகள்: உதயநிதி ஆய்வு!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – வானிலை மாற்றத்தால் உடல்வலியா… உணவின் மூலம் தீர்வு உண்டா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *