உடல் எடையைக் குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது ‘கிரீன் டீ’. காபி, டீ-க்கு நல்ல மாற்றாக மாறிக்கொண்டிருக்கிறது. கிரீன் டீ நல்லது என்கிற கருத்து பரவலாக உள்ள நிலையில் அதை எப்படிக் குடிக்க வேண்டும்… எப்போது குடிக்க வேண்டும்… ஒரு நாளைக்கு எத்தனை முறை கிரீன் டீ குடிப்பது நல்லது என்கிற கேள்விகளும் தொடர்கின்றன. இதற்கான பதில்கள் என்ன?
“கிரீன் டீ துகள்கள், ஆக்ஸிடைஸ் செய்யப்படாத (ஆக்ஸிஜனுடன் வேதியல் ரீதியாக இணையாத) இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை. டீத்தூள் வகைகளிலேயே அதிகம் பதப்படுத்தப்படாதது என்றால் அது கிரீன் டீதான். அதில் பாலிபினால் மற்றும் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. கிரீன் டீ குடிப்பதால் பல விதங்களில் ஆரோக்கியம் மேம்படுகிறது. அது மூளையின் செல்களை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் பாதிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. அதீத பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
கிரீன் டீயில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸுக்கு ஆன்டிஏஜிங் தன்மை உண்டு என்பதால் முதுமைத்தோற்றத்தைத் தள்ளிப்போட உதவுகிறது. தவிர, ரத்த நாளங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இது எடைக்குறைப்புக்கும் உதவி, வளர்சிதை மாற்றச் செயல் சரியாக நடக்கவும் செய்கிறது. ஆற்றலைப் பயன்படுத்தி உடலில் வெப்பத்தை உற்பத்தியாகச் செய்வதன் மூலம் பசி உணர்வையும் கட்டுப்படுத்தி, எடை அதிகரிக்காமலும் காக்கிறது.
ஒரு கப் வெந்நீரில் ஃப்ரெஷ்ஷான கிரீன் டீ பேகை முக்கி, அதன் சாரம் இறங்கியதும் சிறிதளவு தேன் அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம். கிரீன் டீயின் சுவையை மேலும் அதிகப்படுத்த அதில் சில துளிகள் எலுமிச்சைப்பழச்சாறும், துருவிய இஞ்சியும் சேர்த்து சூடாகப் பருகலாம். கிரீன் டீயிலும் கஃபைன் இருக்கும். கஃபைன் சேர்த்த பானங்களைப் பருகுவது அந்த நாள் முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்யும்.
இத்தனை நல்ல பலன்கள் இருந்தாலும் கிரீன் டீயை அளவுக்கு அதிகமாகக் குடிக்கக் கூடாது. ஒரு நாளைக்கு மூன்று கப்புகளுக்கு மேல் குடிக்க வேண்டாம். அதையும் காலையில் தொடங்கி, மாலை 4 மணிக்குள் குடித்து முடித்துவிட வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்தால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். பால் சேர்க்காத கிரீன் டீதானே… அதுவும் தண்ணீருக்கு இணையானதுதானே என நினைத்து தண்ணீருக்குப் பதில் கிரீன் டீயை குடிக்க வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும், பிறகு முற்பகலில், அடுத்து மாலை 4 மணிக்குள் குடிப்பது சிறந்தது.
சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கஃபைன் சென்சிட்டிவிட்டி உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகளும் தாய்ப்பால் கொடுப்பவர்களும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு கப்புகளுக்கு மேல் குடிக்க வேண்டாம். ஆரோக்கியமானது என்பதால் வெறும் கிரீன் டீயை மட்டுமே குடித்துக்கொண்டிருப்பது உங்களை நோயின்றி வாழச் செய்யாது.
ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கைக்கு சரியான உணவுப்பழக்கம், போதுமான தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி போன்றவையும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்” என்கிறார்கள் டயட்டீஷியன்ஸ்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
டொவினோ தாமஸா இது?: ரசிகர்கள் ஷாக்!
என்ன லோகேஷ் ப்ரோ இப்படி சொல்லிட்டீங்க : அப்டேட் குமாரு