சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.
இவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறி உயிரிழந்தார். இது தொடர்பாகக் கண்ணகி நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கழிவுநீர் தொட்டியை மனிதர்களை வைத்து சுத்தம் செய்வதைத் தடுத்து நிறுத்தி இது போன்ற பணிகளுக்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழப்பதைத் தடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் உரையில் கூட, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் இனி 100 சதவிகிதம் இயந்திரம் மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தொழிலாளி ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இந்த துயர நிலை எப்போது மாறும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மோனிஷா
1,813 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள்: ரூ.5,98,500 அபராதம்!
29 நாடுகளில் ஜி20 உணவுத் திருவிழா!