யூடியூப்பில் சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவ குறிப்புகளை வழங்கி வந்த சித்த மருத்துவர் ஷர்மிகா இன்று (ஜனவரி 24) விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் சித்த மருத்துவர் ஷர்மிகா. சமீப நாட்களாக ஷர்மிகா கூறும் மருத்துவ குறிப்புகள் அடங்கிய வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டன.
யூடியூப் ஷார்ட்சில் அவரது மருத்துவ குறிப்பைக் கேட்காமல் கடந்து செல்ல முடியாது என்றே கூறலாம்.
இந்தச்சூழலில் ஷர்மிகா தவறான மருத்துவ குறிப்புகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாகக், காலையில் உருக்கிய நெய் 4 டியூஸ்பூன் வெறும் வயிற்றில் குடித்துவிட்டுச் சுடு தண்ணீர் குடித்தால் முகம் பொலிவு பெறும் என்று கூறியிருந்தார்.
இதனை செய்துபார்த்த யூடியூப் வாசிகள் அதை தங்களது சேனல்களில் பதிவேற்றி ஷர்மிகாவை விமர்சித்திருந்தனர்.
இதோடு கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும், ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடைகூடும், நம்மை விட பெரிய விலங்குகளை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்று அவர் வழங்கிய குறிப்புகள் விமர்சனத்துக்கு உள்ளானதோடு, ஷர்மிகா மருத்துவ நெறிமுறைகளை மீறி தவறான கருத்துகளை கூறி வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், சித்த மருத்துவர் என்.ஷர்மிகா பி.எஸ்.எம்.எஸ். பதிவு எண்: 6507 சித்த மருத்துவ விதிமுறைகளுக்கு முரண்பாடான கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்ததாக 31.12.2022 அன்றைய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடப்பட்ட கட்டுரை/ பல்வேறு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக பதிவாளர் முன்பு 24-01-2023 அன்று முற்பகல் 11 மணிக்கு நேரில் வருகை தந்து விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது 15 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி அவர் இன்று அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கவுன்சிலில் ஆஜராகியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநர் கணேஷ் தலைமையில், இணை இயக்குநர் பார்த்திபன், மற்றும் வல்லுநர் குழு முன்பு ஆஜரான அவர், தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார். அவருடன் இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளனர்.
அறிவியல் ஆதாரங்களுடன் ஷர்மிகா பேசியுள்ளாரா? என விசாரணை நடந்து வருகிறது.
பிரியா
ஈரோடு கிழக்கு, இன்னொரு ஆர்.கே.நகரா? போட்டியிட தயாராகும் டிடிவி தினகரன்
தேசிய கீதம் பாட தெரியாமல் முழித்த இளைஞர்: கோவையில் கைது!