டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி இன்று (மே 29) பணி நியமன ஆணையை வழங்கினார்.
டாக்டர் கே.நாராயணசாமி பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் துணை வேந்தராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே. நாராயணசாமி தற்போது சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணியாற்றி வருகிறார். மருத்துவப் பயிற்சியில் 33 வருட அனுபவமும், மருத்துவக் கண்காணிப்பாளர், பல்வேறு அரசுத் திட்டங்களின் மாநில நோடல் அதிகாரி போன்ற பல்வேறு பதவிகளில் 13 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் பெற்றவர்.
சென்னை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் நாராயணசாமி பணியாற்றி உள்ளார். 2018 முதல் 2022 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் ஹெபடாலஜி இயக்குநராகவும் இருந்துள்ளார்.
கொரோனா பரவல் காலத்தில் கிண்டியில் கிங் மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழ்நாடு அரசால் விருது பெற்றார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் ஹெபடோபிலியரி சயின்ஸ் நிறுவனத்தை (IHBS) உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய நாராயணசாமி அதன் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல சர்வதேச மாநாடுகளையும் ஏற்பாடு செய்து பங்கேற்றுள்ளார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 10ஆவது துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் 2021 டிசம்பர் 30ஆம் தேதி முடிவடைந்தது.
ஆனால் டாக்டர் சுதா சேஷய்யன் பதவி காலம் 2022 டிசம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அவரது பதிவிகாலம் முடிவடைந்த நிலையில் தற்போது நாராயணசாமி துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மோனிஷா