மயிலாடுதுறை இரட்டை கொலை: சாராய வியாபாரிகள் காரணமா? நடந்தது என்ன?

Published On:

| By Kavi

double murder in mayiladuthurai

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அம்மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. double murder in mayiladuthurai

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரக்கத்துக்கு உட்பட்டு முட்டம் கிராமம் உள்ளது. 

இந்த பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தர் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்ததாக தகவல்கள் வருகின்றன. 

அதோடு சாராயம் விற்கக் கூடாது என்று தட்டிக் கேட்பவர்களை இவர்கள் மூவரும் சேர்ந்து அடித்து கொலை மிரட்டல் விடுப்பதுமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறையில் போலீசார் நடத்திய சோதனையின் போது சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். பின்னர் அவர் ஜாமினில் வெளிவந்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சாராய வியாபாரிகள் அடித்திருக்கின்றனர். 

இதனால் முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25), மற்றும் பேச்சாவடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் ஹரிசக்தி மற்றும் அஜய் ஆகியோர் சாராய வியாபாரிகளை கண்டித்துள்ளனர். 

ஹரிஷ் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். ஹரிசக்தி இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் நேற்று (பிப்ரவரி 14) இரவு தகராறு செய்து சரமாரியாக கத்தியில் குத்தியிருக்கின்றனர். 

இதில் படுகாயமடைந்த ஹரிஷுக்கு வயிற்று பகுதியிலும், சக்திக்கு முகுது பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக இரண்டு உடலையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

double murder in mayiladuthurai

இந்தநிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு பேரின் உடல்களை வாங்க அவர்களது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இந்த இரட்டை கொலையைத் தொடர்ந்து முட்டம் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

போலீஸ் சொல்வது என்ன? double murder in mayiladuthurai

இந்த கொலை தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகம், முட்டம் கிராமம், வடக்கு தெருவில் வசிக்கும் முனுசாமி மகன் மூவேந்தன் கடந்த 13 தேதி மாலை சுமார் 06.00 மணியளவில் அவரது தெருவில் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அதே தெருவில் வசிக்கும் தினேஷ் (28) மூவேந்தனை பார்த்து கூச்சலிட்டு சென்றுள்ளார்.

இவர்களுக்குள் ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. மேலும் மூவேந்தனின் அண்ணன் தங்கதுரை மற்றும் உறவினர் ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் இருந்துள்ளன.

13.02.2025-ம் தேதி மூவேந்தன், தினேஷை கையால் அடித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த மக்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பியுள்ளனர்.

இந்த முன்விரோதம் காரணமாக 14.02.2025 இரவு 20.30 மணியளவில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஹரிஷ் (25) சக்தி (20) ஆஜய் (19) ஆகியோர் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த தங்கதுரை (28), ராஜ்குமார் (34), மூவேந்தன் (24) ஆகியோர் மதுபோதையில் மேற்படி தினேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்க முயற்சித்தனர்.

அதனை தடுக்க வந்த அவரது நண்பர்கள் ஹரிஷ், அஜய் மற்றும் சக்தி ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் ஹரிஷுக்கு வயிற்று பகுதியிலும், சக்திக்கு முதுகு பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஹரிஷ், சக்தி உயிரிழந்துவிட்டனர்.

இந்த வழக்கில் இறந்து போன ஹரிஷ், சக்தி, காயம்பட்ட அஜய் ஆகியோருக்கும் எதிரிகளுக்கும் முன்விரோதம் ஏதும் இல்லை.

தினேஷ் மீது நடந்த தாக்குதலை தடுக்க முயன்ற போது இருவர் இறந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என ஸ்டாலின் கையில் இருக்கும் காவல்துறை பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென” வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “இந்த கொலைக்கு அரசும் காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். double murder in mayiladuthurai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share