கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு காரணமாக கைதான பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்ளிட்ட 7 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஜே.ஜெ.நகர் பகுதியில் போதைப் பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(21) என்ற கல்லூரி மாணவரை அப்பகுதி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப் பொருள் மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா எடுத்து வந்து இங்குள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செயலி மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கார்த்திகேயன் கொடுத்த தகவலின் படி, அரவிந்த் பாலாஜி( 20), வத்சல்(21), திரிசண் சம்பத்( 20), ஆருணி(20) உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது செல்போனில் பதிவான எண்களை கொண்டு கஞ்சா விற்பனையில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்(26) செல்போன் நம்பர் இருந்தது. இதனையடுத்து அவரையும், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேரையும் அண்ணா நகர் துணை ஆணையர் தனிப்படை போலீசார், ஜெ.ஜெ நகர் காவல் நிலையம் அழைத்து வந்து, நேற்று ஒருநாள் முழுவதும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை அலிகான் துக்ளக் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
அவர்கள் 7 பேரையும் வரும் 18ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர்.
அப்போது வேனுக்கு அருகில் வந்த மன்சூர் அலிகான் தனது மகனிடம், “தைரியமா இரு… தெம்பா இரு… ஏன் தப்பு பண்ற? கஞ்சா குடிச்சா கவெர்மெண்ட் அரெஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரியாதா? என அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து கைதான 7 பேரும் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்..
கிறிஸ்டோபர் ஜெமா
வீட்டை இழந்து கையில் குழந்தையுடன் தவித்த தாய் : ஆறுதல் சொன்ன அமைச்சர்!
இடைத்தேர்தல் போல வெள்ள நிவாரண பணி: திமுகவோடு மீண்டும் உரசும் ஆதவ் அர்ஜுனா
சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!