கோவையில் உள்ள இந்து, முஸ்லீம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது, அரசியல் கட்சியினர் தயவு கூர்ந்து மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் என ஜமாத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பெரிய பள்ளி வாசல், சிறிய பள்ளி வாசல், கேரளா ஜமாத் உள்ளிட்ட 3 ஜமாத்தை சேர்த்த நிர்வாகிகள், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை சங்கமேஷ்வரர் கோயில் நிர்வாகிகளை சத்தித்து இன்று(நவம்பர் 3) ஆலோசனை மேற்கொண்டனர்.
முன்னதாக கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகளுக்கு கோயில் நிர்வாகத்தினர் அங்கவஸ்திரம் அணிவித்து மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கூட்டமைப்பினர்,
“கோட்டை மேட்டில் இருக்கூடிய 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை பெரிய பள்ளிவாசல், சிறிய பள்ளி வாசல், கேரளா முஸ்லீம் ஜமாத் ஆகிய 3 ஜமாத் நிர்வாகிகள் மதநல்லிணக்க வருகையாக கோட்டை சங்கமேஷ்வரன் கோவில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம்.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்ந்து பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவானதை நாம் அறிவோம்.
இஸ்லாமியர்களாக நாங்கள் 7 தலைமுறைகளாக கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம்.
இப்பகுதியில் உள்ள சங்கமேஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள தெருவில் மசூதிகள், சுற்றியுள்ள மக்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம்.
ஒவ்வொரு பண்டிகையின் போதும் விருந்தோம்பல் வழங்கி சுமார் 200 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் கார் வெடிப்பு சம்பவத்தை கோட்டை மேடு ஜமாத்துகள் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாம் ஒருபோதும் வன்மைறையை தூண்டும் மார்க்கம் அல்ல, நாங்கள் அமைதியை போதிக்கிறோம்.
இங்கு வாழக்கூடிய மக்கள் அண்ணன், தம்பிகளாக சிறுபான்மை, பெரும்பான்மை மக்களோடு நல்லிணக்கதோடு வாழ விரும்புகிறோம்.
கோவையில் உள்ள ஜமாத்துகள் இணைந்து பல்வேறு வர்த்தக ரீதியாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை மக்களோடு இணைந்து நற்பணிகள் செய்வது குறித்தும் திட்டமிட்டு செயலாற்ற உள்ளோம்.
எந்த விதமான மதபூசலுக்கும், அரசியலுக்கும் ஆட்பட கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். உங்களோடு நாங்கள் எங்களோடு நீங்கள் என்ற தாரக மத்திரத்தை முன்னெடுத்து இணைந்து செயல்பட உள்ளோம்.
இது குறித்து உரையாட வந்த ஜமாத் அமைப்பினருக்கு உரிய மரியாதை அளித்து வரவேற்றனர், இதற்கு ஜமாத் சாரபில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அனைவரும் ஒற்றிணைந்து தமிழகத்தில் மத அமைதிக்கு, மத நல்லிணக்கத்திற்கு முன் உதாரணமாக கோவையை மாற்றுவோம்.
எந்த வித பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்கமாட்டோம், எந்த விதத்தில் பயங்கரவாதம் வந்தாலும் இடம் கொடுக்க மாட்டோம். கோவையில் இந்து முஸ்லீம் ஒற்றுயை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
அரசியல் கட்சியினர் தயவு கூர்ந்து மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள், நாங்கள் அமைதியானவர்கள், ஆன்மீகவாதிகள் அமைதியாக வாழவிடுங்கள்” என்று தெரிவித்தனர்.
கலை.ரா
ராஜ ராஜ சோழன் சதயவிழா: 48 பொருட்களால் பேரபிஷேகம்!
நகர சபையா? திமுகவின் நாடக சபையா?: மநீம கேள்வி!