கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜரான அவரது தோழி சுவாதி தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியதால் கோபமடைந்த நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது.
மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதே போல, 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட கோகுல்ராஜின் தோழி சுவாதி, பிறழ்சாட்சியாக மாறிவிட்ட நிலையில் அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று(நவம்பர் 25) சுவாதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் உங்களுடன் படித்தாரா?
சக மாணவர்களுடன் பேசுவதுபோலதான் உங்களுடனும் பேசுவாரா? என கேட்டனர். அதற்கு அவர் ஆம் என்று தெரிவித்தார்.
23.6.2015 அன்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா? அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா? என கேட்டபோது ஞாபகம் இல்லை, பார்க்கவில்லை என்று பதிலளித்தார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய திரையில், சிசிடிவி காட்சி ஒன்றை திரையிட்டு காண்பித்தனர்.
அதில் கோகுல்ராஜூடன் கோயிலில் ஒரு பெண் பேசிக்கொண்டிருப்பது போலவும், கோயிலுக்குள் இருந்து வெளியே வருவது போன்றும் காட்சிகள் இருந்தன.
இதைக்காட்டி இது யார் என்று நீதிபதிகள் கேட்டனர். அந்தக் காட்சிகளை பார்த்த உடன் கதறி அழுத சுவாதி, பின்னர் அது நானில்லை என்றார்.
அப்போது அந்த ஆண் யார் என்றாவது தெரிகிறதா என்று நீதிபதிகள் கேட்டபோது அது கோகுல்ராஜ் போல இருக்கிறது என்று பதிலளித்தார்.
அப்போது நீதிபதிகள், ஒரு புகைப்படத்தை காண்பித்து இது யாரென மீண்டும் சுவாதியிடம் கேட்ட பொழுது இது நான் தான் என ஒப்புக்கொண்டார்.
இந்த புகைப்படத்தில் காண்பித்த நபரை நீங்கள் வீடியோவில் பார்க்கவில்லையா என்று நீதிபதிகள் கேட்டனர். 23ஆம் தேதி நீங்கள் கோகுல்ராஜை பார்க்கவே இல்லை என தெரிவித்தீர்கள்.
மேஜிஸ்ட்ரேட் முன்பாக கோகுல்ராஜ் தெரியும், பார்தேன் என்பது போல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளீர்கள்.
அதை எப்படி தெரிவித்தீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு சுவாதி காவல்துறையினர் சொல்ல சொன்னதை சொன்னேன் என்றார்.
யாருக்கு பயந்து சாட்சி அளித்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, இது அனைத்தும் காவல்துறைக்கு பயந்து தான் சாட்சியளித்தேன், அம்மா அப்பா காவல் நிலையத்தில் இருந்தார்கள் அதனால் பயமாக இருந்தது என சுவாதி தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேஜிஸ்ட்ரேடிடம் உண்மையை சொல்லி இருக்கலாமே சத்திய பிரமாணம் எடுத்துவிட்டு பொய் கூறுவீர்களா? என்றனர்.
மேலும் கோகுல்ராஜ் கடத்தப்பட்ட அன்று சுவாதி சிலருடன் பேசிய ஆடியோவும் ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சுவாதியிடம் இருந்து ஆடியோவில் பேசியது யார் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் யாரிடமும் இப்படி பேசவில்லை என சுவாதி தெரிவித்தார். கோபமடைந்த நீதிபதிகள் குரல் உங்களுடையதா இல்லையா என அதை மட்டும் சொல்லுங்கள் என மீண்டும் கேள்வி எழுப்பினர்.
குரல் சோதனைக்காக உங்களது பேச்சு அனுப்பப்பட உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். கார்த்திக் ராஜா என்பவர் யார்.
கோகுல்ராஜ் காணாமல் போனதற்கு பிறகுதான் கார்த்திக் ராஜா உங்களிடம் பேசினாரா என்று நீதிபதிகள் கேட்டனர்.
எனக்கு அது ஞாபகத்தில் இல்லை என்று சுவாதி கூறினார். அப்போது உங்களது வாழ்க்கையில் இதுபோன்ற மிகப்பெரிய விஷயம் நடந்துள்ளது.
இந்த விஷயம் உங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா என்று நீதிபதிகள் கேட்டனர். யுவராஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டபோது, யுவராஜ் யார் என்றே தெரியாது, தற்போது செய்திகளை பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார்.
சுவாதி தான் பயன்படுத்திய போன் நம்பரை கூட ஞாபகம் இல்லை என்றார். அதற்கு நீதிபதிகள் இன்ஜினியரிங் படித்தீர்களா இல்லையா,
கீழமை நீதிமன்றத்தில் 164 என்று சொல்லக்கூடிய வாக்குமூலத்தை அளித்திருக்கிறீர்கள், அதற்கும் இப்போது கூறும் தகவல்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது என்றனர்.
மனசாட்சிப்படி உண்மையை சொல்லுங்கள் என்று நீதிபதிகள் கூறியபோது, ஆம் தற்போது வரை நான் சொன்ன அனைத்துமே உண்மை என்று சுவாதி பதிலளித்தார்.
நீதிமன்றத்தில் உண்மையை சொல்லுவதற்கு மட்டுமே நீங்கள் ஆஜர் படுத்தப்பட்டிருக்கிறீர்கள். நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுத்திருக்கிறீர்கள், ஆனால் அதை மறந்து சாதி ரீதியாக நடந்து கொள்கிறீர்கள்.
வாழ்க்கையில் சத்தியம், நியாயம், தர்மம் முக்கியம், சாதி முக்கியமில்லை என்று கூறிய நீதிபதிகள், உங்களது புகைப்படத்தை காட்டி உங்களிடம் கேட்டதற்கு நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியவில்லை என்பதை கூறுவதை ஏற்க முடியாது.
உண்மையை மறைக்கும் பட்சத்தில் உங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
உங்களுக்கு 15 நிமிடம் அவகாசம் வழங்குகிறோம் யோசித்து மனசாட்சிப்படி உண்மையை பேசுங்கள் என்று நீதிபதிகள் எழுந்து சென்றனர்.
இதையடுத்து மீண்டும் நீதிபதிகள் விசாரணையை தொடங்கியபோது சுவாதி மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன்பிறகும் சுவாதி அதேபோன்று தான் இல்லை, தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியதால் கோபமடைந்த நீதிபதிகள், இறுதியாக ஒரு எச்சரிக்கை விடுத்தனர்.
வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள், நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி உங்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியும்.
நீதிமன்றம் உங்களிடம் உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது, கீழமை நீதிமன்றத்தைப் போல இந்த நீதிமன்றம் எளிதில் கடந்து செல்லாது.
உண்மையை கூறுவதால் ஏதேனும் அழுத்தங்கள், பிரச்சினைகள் எழும் எனில் அதையாவது சொல்லுங்கள், உங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
நீதிமன்றம் விளையாட்டு மைதானம் என்று நினைத்துவிடாதீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்.
சத்தியம் என்றைக்காவது சுடும். புதன்கிழமை ஒரு வாய்ப்பு தருகிறோம். அப்போதும் இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.
மேலும் காவல்துறையோ, குற்றவாளிகளோ சுவாதியை எந்தவிதத்திலும் அணுகக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள்
சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இதுவரை வழங்கிய பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
கலை.ரா
பேனர் ஊழல்: எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்!
ஆன்லைன் ரம்மி – தினம் தினம் 10 கோடி: கவர்னர் தள்ளும் மர்மம்!