பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்ப்பதுடன், தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளும்படி அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மாண்டஸ் புயல் உருவாகி இருப்பதால் பலத்த காற்று வீசுவதுடன், அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளில் தயார் நிலை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று(டிசம்பர் 8)ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள், பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதில்,
“தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.
கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் கடலோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்து அறிவிப்புகளை வழங்க வேண்டும்.
வங்கக்கடலில் உருவாகிய புயல் சின்னத்தை தொடர்ந்து பொது மக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை செய்திகள் டிஎன்ஸ்மார்ட் செயலி மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
பேரிடரின் போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாக கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.
மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து பல்துறை மண்டல குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
பலத்தக்காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
மின் கம்பங்கள் மின்கடத்திகள் ஆகியவற்ற நிறுத்தி வைத்திருப்பதோடு பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைப்ப குழுக்களை அமைக்க வேண்டும்.
மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசர காலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாகும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும். பால் மற்றும் பால் பவுடர் விநியோகம் தடை இல்லாமல் நடைபெற ஒரு ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.
பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் இடங்களுக்கும் நிவாரண பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலை, நீர்வள ஆதாரத்துறை, மின்வாரியம், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.
9 12.2022 இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பலத்த காற்று வீசும்போது மரங்களின் கீழ் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நீர் நிலைகளின் அருகிலும் பலத்துக்காற்று வீசும்போது திறந்தவெளிலும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிவாரண முகங்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் போது அதனை ஏற்று நிவாரண முகங்களில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முகநூல், ட்விட்டர், டிஎன்ஸ்மார்ட் செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரையை பின்பற்ற வேண்டும். அதிகாரப்பூர்வ தகவலுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
மெழுகுவர்த்தி, டார்ச்லைட், தீப்பெட்டி, பேட்டரிஸ், பேண்டைட், உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்” என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி இருக்கிறார்.
கலை.ரா
புயல் எச்சரிக்கை: 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!
நடிகையின் காலை வருடிய பிரபல இயக்குநர்: வீடியோ வைரல்!