வீட்டுவேலை செய்யும் பெண்கள் VS வேலைக்குப் பணியமர்த்திய பெண்கள்: நவீன தீண்டாமையா?

Published On:

| By Selvam

கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்தில், வீட்டு வேலை செய்த பணிப்பெண் ஒருவரை பாஜக பெண் தலைவர் சிறுநீரை குடிக்கச் சொல்லியும், நாக்கால் கழிவறையை சுத்தம் செய்ய சொல்லியும் கொடுமைப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நேற்று (செப்டம்பர் 4) நடந்த நீயா நானா விவாதத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் வீட்டு வேலைக்கு பணியமர்த்திய பெண்கள் இடையே விவாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வீட்டு வேலைக்குப் பணியமர்த்திய பெண்கள் பேசும்போது, “எங்கள் வீட்டில் வேலைக்கு வரும் பெண்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நல்ல துணி உடுத்தியிருக்க வேண்டும். மாதம் ஆனால் சரியாக சம்பளம் கொடுத்து விடுவோம். ஆனால், மற்ற நேரங்களில் அவர்கள் பணம் கேட்கக்கூடாது. அப்படி அவர்கள் பணம் கேட்டால் நாங்கள் கொடுக்க மாட்டோம். எங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் அவர்கள் வேலை பார்க்கக் கூடாது. நான்கு, ஐந்து வீடுகளில் வேலை பார்த்தால் நாங்கள் அவர்களை வேலைக்கு எடுக்க மாட்டோம். மற்ற வீடுகளில் வேலைக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டுக்கு அவர்கள் வரும்போது வியர்வை நாற்றமெடுக்கும்.” என்று அவர்கள் பேசினர்.

வீட்டு வேலை செய்யும் பெண்கள் பேசும்போது, “அவர்களுக்குப் பண நெருக்கடி வந்தால், வங்கியில் வாங்கி விடுகிறார்கள். எங்களுக்கு யார் தருவார்கள்? ஒரு வீட்டில் மட்டும் நாங்கள் வேலை செய்தால், எங்கள் குழந்தைளை நாங்கள் எப்படிக் காப்பாற்றுவது? நாங்கள் என்ன ஏசியிலா வேலை செய்கிறோம், பாத்திரம் தேய்க்கும் இடத்தில் ஃபேன் இருக்குமா. சமையலறையில் வேலை பார்க்கும்போது வியர்க்கத் தான் செய்யும்.

வியர்வையோடு வீட்டிற்கு வேலைக்குப் போவதால் நாய்க்கு சோறு போடுகிற மாதிரி தனித்தட்டு, தனி குவளையில் தான் சாப்பாடு போடுகிறார்கள். கடைக்குப் போக சொல்லுவார்கள். பணத்தைக் கையில் தொடாதவாறு தான் கொடுப்பார்கள். பக்கத்திலேயே ஒரு நாய் இருக்கும் அதனை கொஞ்சி விளையாடுவார்கள். சமையலுக்கு காய்கறி வாங்கி வர சொல்லுவார்கள், ஆனால் எங்களை சமையலறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். தனி வாஷ்பேசினில் தான் எங்கள் தட்டைக் கழுவ சொல்லுவார்கள். வீட்டிற்கு சாப்பாடு கொண்டு செல்ல, ஒரு பிளாஸ்டிக் கவரில் தான் சாப்பாடு  கொடுப்பார்கள்.” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.

https://twitter.com/vijaytelevision/status/1566312799499862018?s=20&t=-MyV4Jh3fMuFfBzjRExs0Q

இந்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் தற்போது அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 21-ஆம் நூற்றாண்டிலும் நவீனத் தீண்டமையை வேலைக்கு அமர்த்தும் பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள் என்று காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

அதே வேளையில், வீட்டு வேலைக்கு அமர்த்தும் பெண்கள் நிறைய பேர் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களின் பிள்ளைகளுக்கு, பள்ளிக் கட்டணம் செலுத்த உதவுகிறார்கள், திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பணம் கொடுத்து உதவுகிறார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel