செல்லப்பிராணிகள் என்றாலே பொதுவாக ஏராளமானவர்களுக்கு பிடிக்கும். செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க விரும்பும் பலரது தேர்வு நாய்களாக தான் இருக்கும். வீட்டின் காவலனாக, நண்பனாக, குழந்தையாக என வீட்டில் ஒரு நபராக இடம் பிடித்து விடும் நாய்கள்.
இப்படி செல்லப்பிராணிகளை வீட்டின் ஒரு அங்கமாக நினைத்து பார்த்துக் கொள்ளும் பலர் இருந்தாலும், சில அற்ப காரணங்களுக்காக அதனை அடித்துக் கொல்பவர்களும் இருக்கின்றனர்.
குறிப்பாக சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் பகத் ஃபாசில் ரத்தின வேல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் நாய் ரேஸ் விடும் போது, தோற்றுப் போன அவரது நாயை கட்டி வைத்து கொடூரமாக ரத்தம் தெறிக்க தெறிக்க அடித்தே கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.
மனதை பதற வைக்கும் அளவிற்கு இருக்கும் அந்த காட்சி நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்று பலர் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் கோவை மாவட்டத்தில் அப்படி ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டம் கண்ணாம்பாளையத்தை சேர்ந்த ராஜூ என்பவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்து விட்டது எனக் கூறி நள்ளிரவில் கட்டிப் போட்டு அடித்தே கொலை செய்துள்ளார்.
இதனை நேரில் கண்ட பக்கத்து வீட்டுக்காரரான ராஜேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அதன் நகலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த ஜூலை 19 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட அந்த எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கோவை கண்ணம்பாளையம் அருகே சிவகாமி நகரில் வசித்து வரும் ராஜேஷின் பக்கத்து வீட்டில் ராஜூ என்பவர் தற்போது வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ராஜூ அந்த வீட்டில் வெள்ளை நிற ஆண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் ஜூலை 19 ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் ராஜூவின் நாய் அலறும் சத்தம் கேட்டு ராஜேஷ் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராஜூ மற்றும் அவரது தம்பி விபிஷ் இருவரும் அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் நாயை கட்டையால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் ‘ஏன் நாயை அடிக்கிறீர்கள்’ என்று ராஜேஷ் கேட்டதற்கு, ‘நாய் தன்னை கடித்து விட்டது. அதனால் இந்த நாயை கொல்லாமல் விடக்கூடாது. அதற்காக தான் கட்டையால் அடித்துக் கொண்டிருக்கிறோம்’ என விபிஷ் பதிலளித்துள்ளார்.
இதனைக் கேட்ட ராஜேஷ் நாயை அடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் விபிஷ் நாயை தொடர்ந்து கட்டையால் அடித்துக் கொண்டிருந்திருக்கிறார். தொடர்ந்து ராஜேஷ் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
பின்னர் காலை விடிந்தவுடன் ராஜேஷ் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது ராஜூ வீட்டு மொட்டை மாடியில் நாய் ரத்தம் வடிந்த நிலையில் படுத்துக் கிடந்துள்ளது. இதனையடுத்து ராஜூ வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று ராஜேஷ் பார்த்தபோது நாய் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார்.
அன்று முழுவதும் மனவேதனையடைந்த ராஜேஷ் மாலை 5 மணிக்கு சூலூர் காவல் நிலையத்தில் நாயை கட்டையால் அடித்தே கொன்ற விபிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் மாரிமுத்து, ஐபிசி பிரிவு 429-ன் கீழ் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் ராஜேஷ் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் நகலை சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த ராஜேஷிடம் மின்னம்பலம் சார்பாக தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
அவர், “இந்த விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நாயை அடித்து கொன்றவர்களிடம் விசாரணையும் நடைபெறவில்லை. இறந்து போன நாயை உடற்கூறாய்விற்காக நேற்று (ஜூலை 20) தான் ப்ளு கிராஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே விசாரணை செய்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப்ளு கிராஸ் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்” என்று கூறினார்.
இந்த செய்தி தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் வீட்டின் மொட்டை மாடி முழுவதும் ரத்தம் தெறிக்க தெறிக்க அந்த வாயில்லா பிராணியை கொடூரமாக தாக்கி அடித்தே கொன்றுள்ளனர் இந்த மனித மிருகங்கள்.
இந்த செய்தியை அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதும் அதனை பராமரித்துக் கொள்வதும் பாராட்டிற்குரிய விஷயம் தான். ஆனால் இதுபோன்று செல்லப்பிராணிகளை கொடுமைப்படுத்துபவர்கள் அவற்றை வளர்க்க வேண்டிய அவசியமே இல்லை என்றும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் காட்டமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
இரும்புத் தூணில் சிக்கிய பெண் குழந்தையின் தலை… ரயில் நிலையத்தில் பரபரப்பு!
கிளிசரின் கண்ணீர் வடித்தவர்கள் எங்கே?: குஷ்புவை சாடிய கீதா ஜீவன்