புதுச்சேரி பைனான்சியர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 4 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பிடிபட்ட நிலையில், தேர்தல் அதிகாரி ஒருவர் காப்பாற்ற முயன்றதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரில் உள்ள பைனான்சியர் முருகேசன் வீட்டிலிருந்து அவ்வப்போது ஆட்கள் வருவதும், பணம் வாங்கிட்டு போவதுமாக இருந்துள்ளனர். இதனையறிந்த சில மர்ம நபர்கள் டோல்ஃபிரீ எண் 1950 க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று (ஏப்ரல் 18) மதியம் 12.30 மணியளவில் ஜான்சி நகரில் உள்ள முருகேசன் வீட்டுக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளான எஸ்வந்தயா, சந்திரகுமார்,கணேசன், உதவி எஸ்.ஐ.க்கள் அகிலன், மோகன் ஆகியோர் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.
அங்கு சென்றதும் வீட்டில் இருந்த 7 நாய்கள் கூட்டமாக வந்து, அதிகாரிகளை பார்த்து குறைத்தன. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்களிடம், “ஏம்மா நாங்கள் தேர்தல் அதிகாரிகள். நாய்களை கொஞ்சம் நேரம் கட்டிப்போடுங்கள்” என்று கூறியதும், வீட்டில் இருந்த நாய்களை வீட்டுக்கு பின்னால் இருக்கும் தோட்டத்தில் கட்டிப்போட்டுவிட்டு கூடவே இரண்டு மூட்டையையும் அதற்கு அருகிலேயே போட்டு விட்டு, மீண்டும் கதவை திறந்து விட்டனர்.
இதனையடுத்து வீட்டிற்குள் வந்த தேர்தல் அதிகாரிகள், பெட்ரூம் மற்றும் பீரோக்களில் தேடியபோது, 2, 3 லட்சம் என கிடைத்தது.
அதைப்பற்றி வீட்டில் இருந்த முருகேசனின் மூன்று மகள்களிடம் கேட்டபோது, ”எங்கள் திருமணத்திற்கு வைத்திருக்கிறோம் சார், எங்கப்பா சி.எம் நெருக்கமானவர்” என்று சொன்னதும், தேர்தல் அதிகாரி எஸ்வந்தயா கொஞ்சம் யோசித்தபடி தயங்கி நின்றுள்ளார். காரணம் அதிகாரி எஸ்வந்தயா புதுச்சேரி சிஎம் ரங்கசாமிக்கு நம்பிக்கையானவர்.
இதனால் மேற்கொண்டு எந்த விசாரணையும் செய்யாமல் அதிகாரிகள் புறப்பட தயாராகினர். அந்த நேரத்தில் வீட்டின் பின்னால் இருக்கும் தோட்டத்தை பார்த்துவிட்டு வந்த தேர்தல் பறக்கும் படையின் கார் ஓட்டுனர் ஒருவர், ”ஐயா பின்னாடி நாய் கட்டிப்போட்டிருக்கின்ற இடத்தில் 2 மூட்டைகள் கிடக்கிறது, சந்தேகமாக இருக்கிறது” என்று சொல்ல,
உடனே அருகிலிருந்த முருகேசன் மகள்கள், ”சார் அங்க மட்டும் போயிடாதிங்க, நாய் கடிச்சா நாங்கள் பொறுப்பு இல்லை” என்று பதட்டத்துடன் கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த சில அதிகாரிகள், தைரியமாக சென்று அந்த இரண்டு மூட்டையை பிரித்து பார்த்தால் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் தகவல் கொடுத்து முருகேசன் வீட்டுக்கு வரவழைத்தனர்.
தொடர்ந்து வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் மொத்தம் 4 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அதில் ஒரு கோடியே 20 லட்சம் புழக்கத்தில் இல்லாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.
அனைத்தும் எண்ணப்பட்டு அதிகாரிகள் கையெழுத்து கேட்டபோது முருகேசன் மனைவி மயங்கி விழுந்துவிட்டார்.
இதனால் சில நிமிடம் பயந்துபோன அதிகாரிகள், அவரது மகள்களின் ஆதரவோடு தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளியவைத்து அதன் பிறகு கையெழுத்துப் பெற்றனர்.
கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் கொண்டு சென்ற போது, “சார், இது எங்கள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம்” என்று கூறி முருகேசனின் திருமணமாகாத மூன்று மகள்களும் தடுத்து நிறுத்தி கதறி அழுதுள்ளனர்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள், ”பயப்பட வேண்டாம், அப்பா வந்த பிறகு அழைத்து வந்து பணம் எப்படி வந்தது என்று கணக்கு காட்டிவிட்டு வாங்கி செல்லுங்கள்” என்று கூறி கிளம்பிவிட்டனர்.
யார் இந்த முருகேசன்?
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்றுள்ள ஜான் குமாரும், முருகேசனும் இணைந்து முதலில் சீட் பிடித்து, பைனான்ஸ் செய்தனர்.
அதன்பின்னர் சில காலங்களுக்கு பிறகு பிரிந்து வந்த முருகேசன் தனியாக சிட்பண்ட் மற்றும் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.
இவரிடம் தேர்தல் நேர செலவுகளுக்காக, அரசியல்வாதிகள் சிலர் கோடிக்கணக்கான பணம் வட்டிக்கு வாங்குவார்கள்.
அப்படித்தான் இப்போதும் பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு முருகேசன் பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் பணம் கைப்பற்றியதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், “முருகேசனுக்கு நெருக்கமாக இருந்த சிலர்தான் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்துள்ளனர் என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
நிதிஷ்குமார் எங்கே? பீகார் அரசியலில் திடீர் சலசலப்பு!
கோவை: தாமரைக்கு மாறிய இலை ஓட்டுகள்? பதட்டத்தில் வேலுமணி