மழை காலத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியில் உள்ள பாப்பம்மாள் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று தெரியாமல் மழை நீரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்தது. இதை பார்த்த மற்ற இரண்டு நாய்கள் அங்கு ஓடி வந்தபோது, அவை இரண்டும் மின்சாரம் பாய்ந்து இறந்தன.
பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது. அதில் நெட்டிசன்கள், “நெருநாய்களுக்கு பதில் மனிதர்கள் இருந்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும்”என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மின் ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்து சென்றிருக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று நடந்தநிலையில் மறுநாளான இன்று (அக்டோபர் 15) தாம்பரத்தை அடுத்த மதுரபாக்கம் ஊராட்சி மூலச்சேரி கிராமத்தில் பலத்த காற்று காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து நான்கு மாடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த மாடுகள் மூலச்சேரியை சேர்ந்த ராணி, காளிதாஸ் ஆகியோருக்கு சொந்தமானது. பிள்ளைகளை போல வளர்த்து வந்த மாடுகள் உயிரிழந்ததால் ராணி, காளிதாஸ் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை என்பதால் லேசான காற்று அடித்தாலும் அறுந்து விழுந்துவிடும். அதனால் தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் கனமழை காரணமாக பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த திலீப் குமாரின் வீட்டருகே மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது.
இதனை கவனிக்காத அவர் இன்று மின்கம்பியை மிதித்ததால் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திலீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த இரண்டு மூன்று தினங்களில் மதுரை மாவட்டம் மேலூரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த இராமநத்தம் பகுதியில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் குமரேசன் என அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர்.
இப்படி ஒரு சூழலில், சென்னை, தி.நகர் நடேசன் சாலையில் இருக்கும் ஒரு தெருவில், மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் தண்ணீரில் அறுந்து விழுந்த மின்கம்பி#minnambalam #tnrain #chennairain #rain pic.twitter.com/Di2ud4I1qh
— Minnambalam (@Minnambalamnews) October 15, 2024
அங்கு தேங்கியிருந்த மழைநீரில் விழுந்ததில் தீப்பொறி பரவ ஆரம்பித்து பட்டாசு போல் வெடித்து சிதறுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கியிருக்கும் நிலையில், அறுந்து விழுந்திருக்கும் மின் கம்பிகளை உடனே சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதைகள் லிஸ்ட் இதோ!