கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விகடன் இணைய இதழான விகடன் ப்ளஸ் இதழில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி கையில் விலங்கிடப்பட்டது போன்ற ஒரு கார்ட்டூன் வெளியாகியிருந்தது. Vikatan website blocked central
இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.
இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 16) இரவு முதல் விகடன் இணையதளத்தை பலரால் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுந்தது.

இதுதொடர்பாக விகடன் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில்,
“விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.
முன்னதாக விகடன் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10, திங்கள்) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.
இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.
இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விகடன் நிறுவனத்துடன் உடன் நிற்போம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசை விமர்சித்து விகடன் கார்டூன் வெளியிட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விகடன் இணையதளம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஒன்றிய அரசு இணையதளத்தை முடக்கியிருக்கலாம் என விகடன் நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் இந்நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விகடன் நிறுவனத்துடன் உடன் நிற்கும் என்று உறுதியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. Vikatan website blocked central