வாழைப்பழங்களில் நேந்திரம் பழம், செவ்வாழை போன்றவற்றைச் சாப்பிட்டால் எடை கூடும் என்று சொல்லப்படுவது உண்மையா… ஒருநாளைக்கு எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிடலாம்?
“பச்சை வாழைப்பழம், நேந்திரம் பழம் போன்றவற்றில் அடர்த்தியான கார்போஹைட்ரேட் இருப்பதால் அவை சத்தானவையும்கூட.
ஆனால் இவற்றைச் சாப்பிடுவதால் ஒரேயடியாக எடை அதிகரிக்கும் என்று சொல்வதற்கில்லை” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
மேலும், “வாழைக்காயை எடுத்துக்கொண்டால், 100 கிராம் அளவில் 14 கிராம் கார்போஹைட்ரேட்டும் 64 கலோரிகளும் இருக்கும்.
அதுவே வாழைப்பழம் என்றால் 27 கிராம் கார்போஹைட்ரேட்டும் 116 கலோரிகளும் இருக்கும்.
வெறும் கலோரிகளால் மட்டுமே எடை கூடுவதில்லை. அந்த கலோரிகள் எங்கிருந்து வருகின்றன என்பதையும் பார்க்க வேண்டும் என ஆய்வுகள் சொல்கின்றன.
எல்லாவிதமான கார்போஹைட்ரேட்டுகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. உதாரணத்துக்கு, செவ்வாழையில் 21 கிராம் கார்போஹைட்ரேட்டும் 90 கலோரிகளும் இருக்கும். Does eating bananas increase weight?
அதுவே ஒரு டோனட்டை எடுத்துக்கொண்டால், அது மைதாவும் சர்க்கரையும் சேர்த்துச் செய்யப்படுகிறது. அந்த கார்போஹைட்ரேட் வேறு. அந்த வகையில் கலோரி என்பது பல்வேறு உணவுகளிலிருந்து வருவது.
வாழைப்பழத்தைப் பொறுத்தவரை செவ்வாழை மிக மிக ஆரோக்கியமானது.
மலச்சிக்கல், அஜீரணம் என இன்று பெரும்பாலானவர்களுக்கு குடல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. மற்ற எல்லா வாழைகளையும்விட செவ்வாழை மிகச் சிறந்தது.
காரணம், அதில் பொட்டாசியம், மக்னீசியம் இரண்டுமே உள்ளன. இந்த இரண்டுமே ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவக்கூடியவை. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ப்ரீபயாடிக் இதில் மிக அதிகம்.
தினமும் ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குச் சாப்பிட்டால் நம் குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை பத்து மடங்கு உயரும் என்கின்றன ஆய்வுகள்.
ஒரு செவ்வாழையில் 8 கிராம் அளவு ப்ரீபயாடிக் இருக்கிறது. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளும். நேந்திரம்பழமும் இப்படித்தான். அதிலுள்ள மாவுச்சத்து ஆரோக்கியமானது. நேந்திரம் பழத்தை ஆவியில் வேகவைத்துச் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.
செவ்வாழையை நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளோரும் அளவாக எடுத்துக்கொள்ளலாம். பசி உணர்வைத் தூண்டும், மலச்சிக்கல் இருக்காது என்பதால், குழந்தைகளுக்கு பச்சை வாழைப்பழம், நேந்திரம் பழம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. அதனால் மட்டும் எடை கூடிவிடாது.
குழந்தைகள், ஆரோக்கியமான பெரியவர்கள் எல்லோரும் ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் என்பதால் கிட்னி நோயாளிகள் கண்டிப்பாக அதைத் தவிர்க்க வேண்டும். குடல் பாதிப்பு உள்ளவர்கள், செரிமான பிரச்னை உள்ளவர்கள், வாரத்தில் நான்கைந்து நாள்கள் வாழைப்பழம் சாப்பிடலாம்.
வெறும் அரிசி சாதம் மட்டுமே சாப்பிடுவோர், காய்கறிகளே எடுக்காதவர்கள், டோனட் போன்ற நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவோர் ஆகியோருக்குதான் எடை அதிகரிக்கும். சரிவிகித உணவுகள் சாப்பிடும்போது எடை அதிகரிக்க வாய்ப்பில்லை” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சேமியா கருப்பட்டி லட்டு
கிச்சன் கீர்த்தனா : சாக்லேட் சேமியா
Does eating bananas increase weight?