பிரியாணி உள்ளிட்ட பலமான விருந்துக்குப் பிறகு, வெந்நீர் குடித்துவிட்டால் உடலில் கொழுப்பு சேராது என்பது எந்த அளவுக்கு உண்மை? ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? உடனடியாக ஜீரணமாவதற்கு வெந்நீர் சாப்பிடுவது நல்லதா? இப்படிப்பட்ட கேள்விகள் வாய் வழியாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் உலா வருகின்றன… இது எந்த அளவுக்கு உண்மை?.
“பலமான விருந்து சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் அடிப்படை வளர்சிதை மாற்றச் செயல்பாடு அதிகரிக்கும். தவிர வெந்நீர் குடிக்கும்போது சிறுகுடலின் அசைவும் அதிகமாக இருப்பதால் உணவு சீக்கிரம் ஜீரணமாகிவிடும்.
எனவே, பலமான விருந்துக்குப் பிறகும் பிரியாணி சாப்பிட்ட பிறகும் வெந்நீர் குடிப்பதால் சிறுகுடலின் அசைவை வேகப்படுத்தி, செரிமானத்தைத் துரிதப்படுத்தலாமே தவிர, உணவின் மூலம் சேரும் கொழுப்பை அது சேரவிடாது என்று அர்த்தமில்லை.
மற்றபடி பீட்சாவோ, பிரியாணியோ சாப்பிட்டுவிட்டு வெந்நீர் குடித்தால் கொழுப்பு சேராது என்பதற்கான எந்தவித விஞ்ஞானபூர்வ ஆதாரங்களும் கிடையாது.
ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது என்பதற்கும் விஞ்ஞானபூர்வமாக எந்த ஆதாரமும் கிடையாது. நம்முடைய வாயில் இயல்பிலேயே வைரஸ் கிருமிகள் இருக்கும்.
வாயிலுள்ள உமிழ்நீர் மூலமாக அவை செயலிழந்து இருக்கலாம். குளிர்ச்சியான உணவுகளையோ, குளிர்ச்சியாகவோ சாப்பிடும்போது அந்த வைரஸ் கிருமிகள் தூண்டப்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் சளி பிடிக்கும்.
ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பதால் வாய் சுத்தமாகலாம், தொண்டைக் கரகரப்புக்கு இதமாக இருக்கலாம். அவ்வளவுதானே தவிர, ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்காமலிருக்க வெந்நீர் எந்த வகையிலும் உதவாது” என்கிறார்கள் இன்டர்னல் மெடிசின் மருத்துவர்கள்.
சண்டே ஸ்பெஷல் – வயதாக ஆக உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமா?