மருத்துவர் சுப்பையா கொலை : 9 பேரை விடுதலை செய்ய உத்தரவு!

Published On:

| By Kavi

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 14) உத்தரவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள 2.25 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து 2021 ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.

இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்து வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள்  தரப்பில், “விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை. கொலை, கூட்டுச் சதி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை” என்று வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது. 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.

குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டது என்று தெரிவித்த நீதிபதிகள்,

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தனர்.

மேலும் ஒன்பது பேரையும் வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

குவைத் தீவிபத்து: கொச்சி வந்த 7 தமிழர்களின் உடல்கள்!

ஜவஹர்லால் நேரு: மோடியின் துர்க்கனவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel