சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் இன்று (நவம்பர் 13) அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலை பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்தியால் குத்திய விக்னேஷை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியளிக்கும் அரசு மருத்துவர் மீதான இந்த தாக்குதலை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற உடனடி வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், “சென்னையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் அவசர சிகிச்சை தவிர தங்களது வழக்கமான மருத்துவ பணிகளை நிறுத்த வேண்டும், அனைத்து மருத்துவக்கல்லூரி ஆசிரியர்களும் தங்களது கற்பித்தல் பணிகளை நிறுத்த வேண்டும்” என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான மக்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து : விரிவான விசாரணைக்கு ஸ்டாலின் உத்தரவு!