சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் இன்று (நவம்பர் 13) காலை டாக்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக இது அரசியல் வட்டாரத்தில் எதிரொலிக்க… மருத்துவர்கள் சங்கமோ, ‘சேவை செய்யும் எங்களுக்கே பாதுகாப்பு இல்லையா?’ என்ற கேள்வியுடன் மிக அவசியமான சிகிச்சைகளை தவிர பிற வழக்கமான மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுதும் டாக்டர் வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் என்னதான் நடந்தது?
மருத்துவமனை வட்டாரங்களிலும், காவல்துறை வட்டாரத்திலும் விசாரித்தோம்.
“சென்னையை அடுத்த புதிய பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 26 வயது இளைஞர்தான், இன்று காலை 10 மணிக்கு மேல் கிண்டியில் இருக்கக் கூடிய பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
அங்கே டாக்டர் பாலாஜியின் அறையை நோக்கி சென்றிருக்கிறார். உள்ளே சென்றதும் ரூம் கதவை சாத்தியவர், டாக்டர் பாலாஜியின் வாயிலேயே தன் கைகளால் தாக்கியிருக்கிறார். இதனால் டாக்டர் பாலாஜி நிலைகுலைந்துவிட்டார். கோபம் தணியாமல் அந்த இளைஞர் விக்னேஷ் தனது வீட்டில் இருந்து எடுத்து வந்த காய்கறி வெட்டும் கத்தியால் டாக்டர் பாலாஜியின் கழுத்து, முதுகு என சரமாரியாக வெட்டியிருக்கிறார்.
அறை முழுதும் ரத்தம் கொட்ட கதவைத் திறந்து கொண்டு வேகமாக வெளியேறியிருக்கிறார் விக்னேஷ். டாக்டர் பாலாஜியின் அபயக் குரலால் மருத்துவமனையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து அலறிவிட்டனர். காயமடைந்த டாக்டர் பாலாஜி உடனடியாக அங்கேயே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த பையனை பிடித்து வைத்துக் கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கிண்டி இன்ஸ்பெக்டர் பிரபு ஸ்பாட்டுக்கு சென்றார். அடுத்தடுத்து ஏ.சி. ஸ்ரீராம், டி.சி. பொன் கார்த்தி குமார், ஜே.சி. சிபி சக்கரவர்த்தி, அடிஷனல் கமிஷனர் கண்ணன் என முக்கிய போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்றனர்.
உடனடியாக அந்த இளைஞர் விக்னேஷை கைது செய்து கிண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் டாக்டர் பாலாஜிக்கு சிகிச்சை நடந்துகொண்டிருக்க, கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்” என்கிறார்கள்.
டாக்டரை ஏன் கத்தியால் குத்தினார் விக்னேஷ்? அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் பற்றி விசாரித்தோம். அதை விக்னேஷின் மொழியிலேயே தருகிறோம்.
“சார் என் பெயர் விக்னேஷ். நான் சென்னையை அடுத்த புதிய பெருங்களத்தூரில் வசித்து வருகிறேன். எனக்கு வயசு 26. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன்.
எனது அம்மா பிரேமா. அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். முதலில் அம்மாவை சபீதா மருத்துவமனையில் காட்டி மருத்துவம் பார்த்து வந்தோம். அதன் பின்னர் கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை ட்ரீட்மென்ட் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டு கடந்த மே மாதத்தில் இருந்து இங்கே காட்டி வருகிறோம். டாக்டர் பாலாஜிதான் என் அம்மாவுக்கு சிகிச்சையளித்தார்.
என் அம்மா அவ்வப்போது வலி தாங்காமல் வீட்டில் ரொம்ப கஷ்டப்படுகிறார். இதைப் பார்த்து நான் வேற எங்காவது காட்டலாமா என்று தேடி கடந்த அக்டோபர் கடைசியில், விருகம்பாக்கத்தில் டாக்டர் ஜாக்குலின் மோசஸ் புற்று நோய் சிகிச்சை அளித்தார்.
’இதற்கு முன்னாடி எங்கே ட்ரீட்மென்ட் எடுத்தீங்க?’ என்று கேட்டார். கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில்தான் பாத்துக்கிட்டிருக்கோம் என்று நான் சொன்னேன்.
அப்போது டாக்டர், ‘உங்க அம்மாவுக்கு மெடிசன் சைடு எஃபெக்ட் ஆகியிருக்கு’ என்று கூறினார்.
நான் உடனே கிண்டி மருத்துவனைக்கு போய் டாக்டர் பாலாஜிகிட்ட, ‘என்ன சார்… எங்க அம்மாவுக்கு மருந்து ஏதோ சைடு எஃபெக்ட் ஆகியிருக்காமே?’ என்று கேட்டேன். அவர் என்னிடம் சரியாக பதில் சொல்லவில்லை. என்னை எச்சரித்து அனுப்பினார். நான் அழுதுகொண்டே வெளியே வந்தேன்.
இன்று (நவம்பர் 13) காலை என் அம்மாவுக்கு மறுபடியும் கடுமையான வலி. அவர் கஷ்டப்படுவதை என்னால தாங்க முடியவில்லை. காரணம் அந்த டாக்டர்தானே என கோபம் அதிகமாக வந்தது. வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தி எடுத்துக்கொண்டு காலையிலேயே கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு போனேன்.
டாக்டர் பாலாஜி ரூமுக்கு சென்று கதவை சாத்தினேன். ‘எங்க அம்மாவுக்கு என்னய்யா மருந்து கொடுத்தே? அப்படினு கேட்டு அவர் வாயிலயே குத்தினேன். கோபம் தாங்காம வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற கத்தியால அவரை குத்தினேன். இதுதான் சார் நடந்தது.
எனக்கு என்ன வேண்டுமானாலும் தண்டனை கொடுங்க சார்… ஆனா எங்க அம்மாவுக்கு நல்ல சிகிச்சை கொடுக்க சொல்லுங்க சார்” என்று கதறி அழுதிருக்கிறார் டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வணங்காமுடி
தளபதி 69 : இணைகிறாரா சிவராஜ்குமார்?
மருத்துவருக்கு கத்திக்குத்து : காலவரையற்ற வேலைநிறுத்தம் -டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு!