சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்தி அதை வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய பாலியல் டாக்டர் சதீஷ்குமார் அந்த வழக்கில் காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்தால் தப்பித்தார்.
ஆனால் அந்த தைரியத்தில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் தனது மாணவிகளிடமே அவர் அத்துமீறியதால் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த பாலியல் அத்துமீறல்கள் ஒருபக்கம் என்றால்…இன்னொரு பக்கம் வேறு விதமான மோசடிகளையும் கூசாமல் செய்திருக்கிறார் இந்த டாக்டர்.
அதில் ஒன்றுதான் போஸ்ட் மார்ட்டம் செய்யாமலேயே போஸ்ட் மார்ட்டம் செய்வது. என்ன குழப்பமாக இருக்கிறதா?
சந்தேகத்துக்கு இடமான மரணங்களில் அந்த சந்தேகத்தைத் தீர்ப்பதற்கும் மரணத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கும் அறிவியல் ரீதியான மருத்துவ முறைதான் போஸ்ட் மார்ட்டம் (post mortem).
அதாவது இறப்புக்குப் பிறகான ஆய்வு என்று இதற்குப் பொருள். அண்மையில் கூட கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டம் என்னும் உடற் கூறாய்வின் முக்கியத்துவம் பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில் இப்படிப்பட்ட போஸ்ட் மார்ட்ட பணிகளில் கூட முறைகேடு செய்திருக்கிறார் டாக்டர் சதீஷ்குமார் என்று தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே புகார்களை கிளப்புகிறார்கள்.
போஸ்ட் மார்ட்டம் நடைமுறை என்ன?
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் போஸ்ட்மார்ட்டம் செய்பவர்கள் சாதாரண டாக்டர்களாகத்தான் இருப்பார்கள், அவர்களுக்கு உதவியாக லேப் டெக்னிஷியன் அல்லது மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்) ஒருவர், துப்பரவு தொழிலாளி ஒருவர் இருப்பார்கள்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர்கள் அதற்கான மருத்துவ சட்டம் சார்ந்த மருத்துவப் படிப்பு படித்திருப்பார்கள், அவர்களுக்கு உதவியாக ஜூனியர் டாக்டர்கள் இருப்பார்கள், இல்லாத பட்சத்தில் லேப் டெக்னிஷன் அல்லது மருந்தாளுநர் இருப்பார்கள்.
இறந்தவரின் உடலை கிழித்து ஒவ்வொரு உறுப்பாக எடுத்து டாக்டரே ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு உறுப்புகளையும் பார்த்து பாய்சன் சாப்பிட்டதா, விபத்துக்குள்ளானதா என்றும், தாக்கப்பட்டு கொல்லப்பட்டவராக இருந்தால் அடி அல்லது கத்தி குத்து ஏற்பட்டுள்ள இடத்தை பார்த்து நீளம், அகலம், ஆழம் போன்ற ஒவ்வொரு தன்மையும் சொல்வார்.
அப்போது அருகில் இருக்கும் உதவியாளர்கள், மருந்தாளுநர் அல்லது லேப் டெக்னிஷியன் குறிப்பு எழுதுவார்கள். முடிவில் போஸ்ட் மார்ட்டம் செய்யும் டாக்டர், கையெழுத்துப் போட்டு மெடிக்கல் ரிப்போர்ட் (MRD) அலுவலகத்தில் ஒப்படைப்பார்கள். இதுதான் முறை.
இயற்கை மரணம், நீண்ட நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இறப்பவர்கள் தவிர்த்து, சந்தேக மரணம், விபத்து மரணம், மோதலில் ஏற்படும் மரணங்கள் அனைத்தும் போஸ்ட்மார்ட்டம் செய்வார்கள்.
எந்த காவல் நிலைய எல்லைக்குள் சம்பவம் நடந்துள்ளதோ அந்த காவல் நிலையத்திலிருந்து பிரேதப் பரிசோதனை வேண்டுகோள் கடிதத்தை எடுத்துப்போய் அரசு மருத்துவமனையாக இருந்தால் RMO விடம் கொடுப்பார்கள்.
அவர் எந்த டாக்டர் பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்வார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இருந்தால் தலைமை உடற் கூறாய்வு டாக்ரிடம் கொடுத்தால் போதும். அவர் ஒரு டாக்டரை இதற்காக நியமிப்பார்.
சென்சிட்டிவான வழக்கு சம்பந்தமான போஸ்ட்மார்ட்டமாக இருந்தால் டாக்டர்கள் குழு வீடியோ பதிவுடன் செய்வார்கள். போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது போஸ்ட் மார்ட்டம் படிவத்தில் ஏழு காலத்தை நிரப்பவேண்டும்.
குடலில் உள்ளது, சிறு குடலில் உள்ளது, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை எப்படி உள்ளன (அடிபட்டிருக்கிறதா அல்லது பாதித்திருக்கிறதா) சிறுநீர், மூளை, ரத்தம் அனைத்தும் சேகரித்துப் பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து டெஸ்ட்டுக்கு அனுப்பவேண்டும்.
அந்த படிவத்தில் போஸ்ட் மார்ட்டம் செய்த நேரம், தேதி, போஸ்ட் மார்ட்டம் எண் போன்றவற்றைப் படிவத்தில் குறிப்பிட்டுக் கையெழுத்திட்டு MRDவிடம் ஒப்படைக்க வேண்டும். இதெல்லாம் பொதுவான போஸ்ட் மார்ட்ட விதிகள்.
தர்மபுரியில் தடம் மாறிய போஸ்ட் மார்ட்ட விதிகள்!
ஆனால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யும் சல்லாப டாக்டர் சதீஷ்குமார், போஸ்ட் மார்ட்ட வெற்று படிவத்தில் கையெழுத்து மட்டும் முன்பே போட்டுக் கொடுத்துவிடுவார்.
பிணவறைக்குள் போகமாட்டார், பிணவறையில் துப்பரவு பணியாளர், லேப் டெக்னிஷியன் சசிகலா ஆகிய இருவர் மட்டுமே போஸ்ட் மார்ட்டம் செய்து, ஏற்கனவே டாக்டர் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துள்ள படிவத்தில் தேதி, நேரம், AM, PM, மற்றும் ஏழு காலத்தை நிரப்பிக் கொடுத்துவிடுவார்கள்.
இந்த அதிர்ச்சித் தகவலை நம்மிடம் தெரிவித்தார்கள் மருத்துவக் கல்லூரியில் பணிசெய்யும் மருந்தாளுநர்கள் சிலர்.
நாம் லேப் டெக்னிஷன் சசிகலாவைத் தொடர்புகொண்டு இதுபற்றிக் கேட்டோம். “சார் தற்போது அந்த இடத்தில் நான் டூட்டி பார்க்கவில்லை.
அது எப்படி சார் டாக்டர் இல்லாமல் போஸ்ட்மார்ட்டம் செய்யமுடியும்? அவர்தானே கையெழுத்து போடவேண்டும்?” என்று நம்மிடம் கேள்வி கேட்டார்.
தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூர் காவல்நிலையம் லிமிட்டில் லோகேஷ் என்ற 27 வயது இளைஞர் மருந்து குடித்து இறந்துவிட்டார். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு (குற்ற எண் 281/2021 போஸ்ட்மார்ட்டம் வரிசை எண் 484/2021) டாக்டர் சதீஷ்குமார் இல்லாமலே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது, இதுவரையில் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வழங்கப்படவில்லை என்கிறார்கள் காவல் துறையினர்.
இதுபோன்ற பல போஸ்ட்மார்ட்டங்கள் டாக்டர் சதீஷ்குமார் இல்லாமலே செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் மாவட்ட காவல்துறையினரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்களும்.
பணம் கொடுத்தால் சர்டிபிகேட்
அதே போல் என்ன மாதிரியான மெடிக்கல் சர்டிபிகேட் வேண்டுமானாலும் பணம் கொடுத்தால் போதும் உடனே கொடுத்துவிடுவார்கள். அப்படிதான் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலைய எஸ் ஐ, க்கு மெடிக்கல் விடுப்புக்குக் கடிதம் கொடுத்துள்ளார் டாக்டர் சதிஷ்குமார்.
வைரஸ் ஃபீவர் (காய்ச்சல்) என்று குறிப்பிட்டு அந்த சர்டிபிகேட்டை கொடுத்துள்ளார். உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்,
”எஸ்.ஐ.க்கு மெடிக்கல் லீவுக்காக கொடுத்துள்ள சான்றில் ஒபி அல்லது ஐபி எண் குறிப்பிடவில்லை. வைரஸ் ஃபீவர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படி என்றால் பிளட் டெஸ்ட் எங்கே எடுக்கப்பட்டது? அந்த ரிப்போர்ட் இணைக்கவில்லை.
ரிப்போர்ட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரையில் பதில் இல்லை” என்கிறார்கள் போலீசார்.
சொல்லப்போனால் சல்லாப டாக்டர் சதீஷ்குமார் அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரியில் பலரிடமும் பல அட்டகாசங்கள் செய்துவந்தார், ஆனால் அவரைத் தட்டி கேட்க வேண்டிய டீன் அம்சவல்லி தட்டி கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை! ஆனால் மின்னம்பலம்.
காம் செய்தியின் நடவடிக்கையால், சல்லாப டாக்டர் சதீஷ்குமாரின் ஆட்டங்களுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது என்றார்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிசெய்யும் பெண் ஊழியர்கள்.
மருத்துவர்களை பரிசோதிக்கும் அறிவும், மனமும் மக்களுக்கு இல்லை. எனவே மருத்துவர்களை மலை போல நம்புகிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை வைத்தே விளையாடும்போதுதான் மக்களின் நம்பிக்கை மாபெரும் கோபமாக மாறுகிறது.
இதுபோன்ற ஒரு சில மருத்துவர்களால் ஒட்டுமொத்த மருத்துவ உலகத்தின் மீதான பார்வையும் மாறிக் கொண்டிருக்கிறது. இதை மருத்துவர்களும், அரசும் இனியும் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
–வணங்காமுடி
சல்லாப டாக்டருக்காக போலீஸ் நடத்திய கட்டப் பஞ்சாயத்து!
அதிமுக கலவரம்: ஓபிஎஸ் ஆதரவாளரிடம் சிபிசிஐடி விசாரணை!