இளைஞர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜி, தான் நலமுடன் இருப்பதாக இன்று (நவம்பர் 14) தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை அடுத்து விக்னேஷுக்கு நவம்பர் 27ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் அவசர சிகிச்சை தவிர்த்து பிற மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து அவர் காலை உணவு உட்கொள்ளும் வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.
அதில், ”நான் நலமுடன் இருக்கிறேன். இதய மருத்துவர்கள் குழுவினரும் எனக்கு சிகிச்சை அளிக்கின்றனர். தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான சிகிச்சைகளும் எனக்கு வழங்கப்பட்டு வருகிறது” என மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆதவ் ஆர்ஜூனா – லாட்டரி மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு!