சென்னை கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவம்பர் 14) தெரிவித்துள்ளார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி நேற்று விக்னேஷ் என்பவரால் கத்திகுத்துக்கு ஆளாகினார். இதனை அடுத்து அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் உடல் நலம்பெற்று வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில் “மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று காலை நான் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
அவர் எழுந்து உட்கார்ந்து எங்களிடம் சரளமாகப் பேசினார். மருத்துவர் பாலாஜியின் மகளும் ஒரு மருத்துவர் என்பதால், அவரும் தனது அப்பாவிற்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சைகளை கண்காணித்து வருகிறார்.
மருத்துவர் பாலாஜியின் மனைவி மற்றும் தாயாரும் அவருடன் இருக்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் பேஸ்மேக்கரை(Pace maker) சோதனை செய்து, அது நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அதனைத் தயாரித்த நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது.
இருப்பினும் அந்த பேஸ் மேக்கரை இன்று மீண்டும் அந்த நிறுவனம் சோதனை செய்யவுள்ளது.
இன்று மதியத்திற்குப் பிறகு, அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனியறைக்கு மருத்துவர் பாலாஜி மாற்றப்படவுள்ளார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கும்.
அவரை தாக்கிய விக்னேஷ் மீது காவல்துறை பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளான 126/2, 115/2, 118/1, 121/2, 109 உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது.
நீதிமன்றம் அவருக்கு 15 நாட்கள் கடுங்காவல் தண்டனை வழங்கியதை ஒட்டி, விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ஏற்கனவே மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களை ஒட்டி, தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்புக்குத் தேவையான சீர்திருத்தங்களைக் குறித்துக் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்களுடனான கூட்டம் நடைபெற்றது.
“பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது”
அதில் மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதைச் செயல்படுத்துவதற்கு டிஎஎம்எஸ், டிபிடி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் சில, அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் காவல் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து பாதுகாப்பு குறித்துக் கூட்டுத் தணிக்கை நடத்தப்பட வேண்டும்.
மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
மருத்துவமனைகளில் தேவையான வெளிச்சம் மற்றும் விளக்குகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவேண்டும்.
ஒப்பந்த முறையில் பணிபுரியும் பணியாளர்கள் வருகை பதிவேடு பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
நான்கு நிறங்களில் டேக்
மேலும் கடந்த அக்டோபர் மாதம் முதல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முயற்சியாக நோயாளிகளுடன் வந்தவர்களுக்கு, மருத்துவ பிரிவுகளுக்கு ஏற்ப நான்கு நிறங்களில், கையில் கட்டக்கூடிய டேக்(Tag) வழங்கப்பட்டு வருகிறது.
பச்சை நிற டேக் சர்ஜிக்கல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ சேவை, சிகப்பு நிற டேக் தீவிர சிகிச்சை சேவை, மஞ்சள் நிற டேக் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவை, நீல நிற டேக் பொது மருத்துவ சேவைகள் பெறுபவர்களுடன் வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவை படிப்படியாகத் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவமனைகளிலும் அறிமுகம் செய்யப்படும். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு , 11க்கும் மேற்பட்ட அனைத்து அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் உள்ளடக்கிய சங்கங்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் நானும், காவல் உயர் அதிகாரிகள், டிஎம்எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டோம். இந்த கூட்டத்தில், மருத்துவர் பாலாஜி கொலை முயற்சி வழக்கு தொடர்பாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகக் கூறினார்கள்.
அந்த வகையில், இன்று அனைத்து மருத்துவ சங்கங்களும் தமிழ்நாட்டில் மருத்துவ சேவை பாதிக்கப்படாதவாறு மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்” என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வைகோ மருத்துவமனையில் அனுமதி… காரணம் என்ன?
’இஸ்ரேலியரா? கடையை விட்டு இறங்குங்கள்’ : தேக்கடியில் காஷ்மீர் வியாபாரிகள் செய்த காரியம்!
’நான் நலமுடன் இருக்கிறேன்’ : வீடியோவில் மருத்துவர் பாலாஜி