லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு நெய் சப்ளை செய்த நிறுவனங்களில் ஒன்றான திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி புட் என்ற நிறுவனத்தின் நெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தசூழலில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம்( எப்எஸ்எஸ்ஏஐ) ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியது.
அதில், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சப்ளை செய்த நெய் மாதிரிகளை ஆய்வு செய்தததில் அனைத்துமே தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும், இதனால் உணவு பாதுகாப்பு தரநிலை விதிகளை மீறியதற்காக நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் எப்எஸ்எஸ்ஏஐ கேள்வி எழுப்பியிருந்தது.
இதை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், “கடந்த 29ஆம் தேதி நோட்டீஸ் கொடுத்துவிட்டு இரண்டு நாட்களில் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். எங்களுக்கு ஆவணங்களை வழங்க அவகாசம் வேண்டும். திருப்பதி நிறுவனமே எங்கள் நெய்யில் கலப்படம் இல்லை என்று தெரிவித்துவிட்டது” என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி சதீஷ்குமார், ‘கொடுக்கப்பட்ட நோட்டீஸில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை. ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டாமா ?” என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் எங்கே? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, விரிவான நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
தோனிக்கு சி.எஸ்.கே பெருமை… ரோஹித்துக்கு சிறுமை செய்யும் மும்பை!
ரயில் படிக்கட்டில் பயணம்: இளைஞர் உயிரிழந்த சோகம்!