Court order in nlc case

செப்டம்பர் 15க்கு பிறகு பயிரிடக்கூடாது : நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் என்.எல்.சி நிறுவனம் கால்வாய் எடுக்கும் பணியை தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 31) அனுமதி வழங்கியது.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி நிறுவனம் கால்வாய் எடுக்கும் பணியை செய்து வருகிறது. இதற்காக பயிர்களை அழித்து கான்கிரீட் அமைத்து வருகிறது.

இந்நிலையில் வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நெற் பயிர்களை அறுவடை செய்யும் முன் என்.எல்.சி நிறுவனம் விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயி முருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது விவசாயி தரப்பில் பாமக வழக்கறிஞர் பாலு ஆஜராகி, “இந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகும் கடந்த 16 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது உள்ள அரசாணைப்படி கையகப்படுத்தப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தாவிட்டால் அதை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதை விசாரித்த நீதிபதி, “இந்த அரசாணை குறித்து நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அது அரசின் கொள்கை முடிவு. அதுகுறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தற்போது வளையமாதேவி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த என்.எல்.சி தரப்பு, “உடனடியாக கால்வாய் தோண்டப்பட்டு தண்ணீர் செல்லக்க்கூடிய ஒரு வழியை கட்டாயம் ஏற்படுத்த வேண்டியுள்ளது.

ஒருவேளை அதை செய்யாவிட்டால், அந்த நீரானது ஆலைக்குள் சென்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த கால்வாய் அமைக்கும் பணிக்கு எந்தவித தடையும் விதிக்கக் கூடாது” என்று வாதிட்டது.

1.5 கிலோ மீட்டர் தூரத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயார் எனவும் என்.எல்.சி தெரிவித்தது.

இதை விசாரித்த நீதிபதி, “தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தொடரலாம். அதே நேரத்தில் கால்வாய்க்கு தேவைப்படாத மற்ற பகுதிகளை செப்டம்பர் 15 வரைக்கும் சேதப்படுத்தக் கூடாது.

இதுதவிர மின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து என்.எல்.சி நிறுவனமும், தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்,

வேலைவாய்ப்பு, இழப்பீடு தொடர்பான அனைத்து விஷயங்களையும் என்.எல்.சி மற்றும் தமிழக அரசு  எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும்.

மனுதாக்கல் செய்த விவசாயி முருகனும், செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு அந்த இடத்தில் விவசாயம் செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரியா

இந்துக்களுக்கு மட்டும் அனுமதி: பதாகையை மீண்டும் வைக்க உத்தரவு!

ரசிகர்களுக்கு குஷ்பு கொடுத்த ஷாக்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *