கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் இயக்குநர் சண்முகக்கனி, ஐசியுவில் ஏசி, ஆக்சிஜன் வசதி ஆகியவை இல்லாததை கண்டு அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் அரசு மருத்துவமனையில் ஆர்எம்ஒவாக (மருத்துவ நிலைய அதிகாரி) பணியாற்றிய டாக்டர் சண்முகக்கனி அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் இயக்குநராக(DMS) பொறுப்பேற்றார்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புறநோயாளிகள் வார்டு, ஐசியு என அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர், மருத்துவமனை அசுத்தமாக இருக்கிறது, நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் இல்லாத நிலை இருக்கிறது. என்னதான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என அங்கு பணியாற்றும் மருத்துவர்களையும், பணியாளர்களையும் அழைத்து கண்டித்துள்ளார்.
இதுகுறித்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிபவர்களிடம் பேசினோம்.
“டிஎம்எஸ்-ஆக பொறுப்பேற்று முதல் முறையாக நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) காலை 9.30 மணியளவில் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சண்முகக்கனி வந்தார். அவரை இணை இயக்குநர் ரமேஷ் பாபு, தற்போதைய ஆர்எம்ஒ பாலகுமாரன், கண்காணிப்பாளர்(பொறுப்பு) நடராஜன், டாக்டர் அசோக் பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். அவர்களிடம் யாரும் செல்போனை எடுத்து புகைப்படம் எதுவும் எடுக்க வேண்டாம் என்று கூறினார் சண்முகக்கனி.
பின்னர் புறநோயாளி பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, ஐசியு வார்டுகளில் பார்வையிட்டார். ஏற்கனவே கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டராகவும் ஆர்எம்ஒவாகவும் பணியாற்றியவர் என்பதால் அனைத்து வார்டுகளையும் நன்கு அறிந்தவர். இதனால் ஆய்வு செய்தபோது பின்னால் வந்த தற்போதைய ஆர்எம்ஒ பாலகுமாரனை பார்த்து, ஏன் இங்கே இருக்கீங்க?. புற நோயாளி பகுதியில் கூட்டமாக உள்ளது. அங்கே போய் நோயாளிகளை பாருங்கள் என்றார்.
அடுத்ததாக மயக்க மருந்து போடும் டாக்டரும், கண்காணிப்பாளருமான (பொறுப்பு) நடராஜனை பார்த்து உங்களுக்கு, இங்க என்ன வேலை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று வேலையை பாருங்கள். சும்மா ஏமாற்றாதீங்க என கோபப்பட்டார்.
கண் டாக்டர் அசோக் பாஸ்கரைக் கூப்பிட்டு உங்களுக்கு கண்காணிப்பாளர் பதவி வந்தும், ஏன் இன்னும் பொறுப்பேற்காமல் இருக்கிறீர்கள். உடனே பொறுப்பேற்று வேலையைப் பாருங்கள் என கூறினார்.
ஐசியு வார்டுக்கு சென்ற அவர், இணை இயக்குநர் ரமேஷ்பாபுவைப் பார்த்து என்னங்க இந்த வார்டை இவ்வளவு கேவலமாக வைச்சுருக்கீங்க. எப்படி இருந்த வார்டு இப்படி இருக்கு. உயிர் காக்கும் வார்டுக்கு ஏசி இல்லை, பல படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி இல்லை. ஒவ்வொரு படுக்கைக்கும் இடையே ஸ்கிரீன் இல்லை, கொஞ்சமாவது சர்வீஸ் பண்ணுங்க என காட்டமாக பேசினார்.
தீப்புண் வார்டை பார்த்து இன்னும் அதிகமாக கோபப்பட்ட இயக்குநர் சண்முகக்கனி இந்த வார்டில் ஏசி இல்லாமல் இப்படி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் ரவுன்ட்ஸ் போகமாட்டீங்களா என லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.
கடைசியில் அனைவரையும் அழைத்து ஹாஸ்பிடல் இவ்வளவு மோசமாக இருக்கிறது. சுத்தமில்லை கண்ட இடத்தில் சாக்கடை போல் கழிவுநீர் ஓடுகிறது. அதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.
அரசு ஒதுக்கீடு செய்த நிதியை சரியான முறையில் செலவு செய்யாமல், நிதியை திருப்பி அனுப்பியிருக்கீங்களே, ஏன்?. கொஞ்சமாவது மனசாட்சியுடன் வேலையை செய்யுங்கள் என கோபத்தை கொட்டித் தீர்த்து விட்டு சென்னைக்கு புறப்பட்டார்” என்றனர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் சிலர்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 25) காலையில் தமிழ்நாடு சுகாதார கூட்டமைப்பு திட்டத்தின் இணை இயக்குநர் கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். இன்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் கூடுதல் இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து மீண்டும் இன்று இயக்குநர் சண்முகக்கனி வருகைத் தருகிறார்.
சண்முக்கனியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளுக்கு சிறப்பான சேவைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வணங்காமுடி
Comments are closed.