மதுரையில் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற வாலிபர் திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். அவரது பிறந்த நாள் கடந்த இரு தினங்களுக்கு முன் திருமங்கலம் நகர் பகுதியில் கொண்டாடப்பட்டது.
அப்போது இருபதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக இணைந்து 3.5 அடி உயர வாளை அஜய்க்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளனர். பின்னர் அதனை வைத்து அஜய் கேக்கையும் வெட்டியுள்ளார்.
அந்தக் கொண்டாட்டத்தின் நிகழ்வை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வீடியோக்களை வைரல் ஆக்கவும், அதிக லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே தேவர் ஜெயந்தியின் போது மதுரையில் தனியார் பெண்கள் கல்லூரியில் இளைஞர்கள் பைக்கில் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி கல்லூரி முன்பு மாணவியின் தந்தையை இளைஞர்கள் தாக்கியது உள்ளிட்ட நிகழ்வுகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் தற்போது திருமங்கலத்தில் பட்டா கத்தியால் இளைஞர்கள் கேக் வெட்டி அந்த நிகழ்வை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு ஊழியர்கள்!
என்னை விமர்சிக்கத்தான் எட்டு டாலர் கட்டணம்: எலான் மஸ்க்