திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ.நகர் பகுதியில் வசித்து வந்தவர் மோகன். 35 வயதான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 8) இரவு 10 மணியளவில் மோகன் தனது வீட்டுக்கு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகர் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரை முகம் மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார். அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் இதைப் பார்த்து மோகனின் உறவினருக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். அதனை அடுத்து உடனடியாக மோகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். மோகன் தி.மு.க பிரமுகர் என்பதால் அரசியல் பழிவாங்கலா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது திருத்தணி ஜோதி நகரைச் சேர்ந்த சஞ்சய், பெரியார் நகரைச் சேர்ந்த விக்கி, வியாசார்பாடியைச் சேர்ந்த நிதிஷ் ஆகிய 3 பேரை கைது செய்து இருக்கின்றனர்.
2009-ம் ஆண்டு சஞ்சய் என்பவரின் சித்தப்பா சிவாவின் கைகளை வெட்டிய முன்விரோதம் காரணமாக தற்போது மோகனை கொன்றதாக அவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருக்கின்றனர்.
கலை.ரா
25ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு: பொன்முடி