பிஞ்சுக் குழந்தையை சிதைத்த முதிய பிசாசு – தமிழக பயங்கரம்!

தமிழகம்

யூகேஜி படிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தொடக்க பள்ளித் தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நகரில் பதினைந்து வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் வைத்தியலிங்கம் துவக்கப் பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ளது. சுமார் 95 குழந்தைகள் படித்து வருகிறார்கள். ஆறு பெண் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆசிரியைகளும் தப்பவில்லை

இந்தப் பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி, 1997இல் அரசுப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து கடைசியாக கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் ஓய்வு பெற்றார். அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோதே தனியார் பள்ளியைத் துவங்கி பணம் பார்த்தவர். அந்தப் பள்ளியில் பணிசெய்யும் சில ஆசிரியைகளையும் வசப்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள் முன்னாள் ஆசிரியர்கள் சிலர்.

6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

நேற்று (ஏப்ரல் 11) தனது பள்ளியில் யூகேஜி படிக்கும் ஆறு வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்று, சிறுமியின் உடல் முழுவதும் தொட்டுத் தடவி என்னவென்றே அறியாத அந்த தளிரை சிதைத்திருக்கிறார் பக்கிரிசாமி. இதனால் பாதிக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டுத் துடித்துள்ளது.

துடிதுடித்த சிறுமியை உடல்நலம் சரியில்லை என்று அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தந்தையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

dmk councilor arrested

குழந்தையின் பெற்றோர் ஏதோ யூரின் இன்ஃபெக்‌ஷன் என்று முதலில் அலட்சியமாக இருந்தார்கள். பின்னர் பாத்ரூம் போகும்போதெல்லாம் குழந்தை அழுகிறாளே என்று நேற்று இரவு சுமார் 8 மணியளவில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் இருந்தே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கண்ணீர் வடித்த அதிகாரிகள்

இதனையடுத்து எஸ்பி ராஜாராம் இரவே விருத்தாசலம் விரைந்தார். அவருடன் விருத்தாசலம் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்கியராஜ், அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

அங்கு சிகிச்சையிலிருக்கும் பிஞ்சு குழந்தையிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அந்த குழந்தை, ”ஸ்கூல் போனதும் கொஞ்ச நேரத்திற்கு பிறகு (11.15 மணியளவில்) சார் ரூம்க்கு கூட்டிட்டு போனாங்க எங்க மிஸ். சார், என்னைத் தூக்கி மடியில் உட்கார வெச்சுகிட்டார். சாக்லெட் வேண்டுமா? இந்தா சாப்பிடு, வேறு என்ன வேண்டும் எனப் பேசியபடி ஸ்கர்ட்க்குள் (உள்ளாடை) கையை வைத்து விரலால் என்னவோ பண்ணார். அப்போது வலிச்சுது” என்று பிஞ்சு குரலில் கூறியதை கேட்டதும் விசாரித்த போலீஸ் அதிகாரிகளே கண்ணீர் வடித்துள்ளனர்.

இந்த தகவல்களை மேலிடத்தின் முக்கிய அதிகாரிக்குத் தெரியப்படுத்த அங்கிருந்து வந்த அறிவுறுத்தலின்படி… உடனடியாக பக்கிரிசாமியை போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார் எஸ்.பி.ராஜாராம்.

போலீசாரின் ‘ஸ்பெஷல்’ கவனிப்பு

உடனடியாக இரவு 12.00 மணியளவில் பள்ளித் தாளாளர் பக்கிரிசாமியை போலீஸ் வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரித்தனர். விசாரணை துவக்கமே சூடாக இருந்துள்ளது.

’உன் பெயர் என்னடா?’ என்று கேட்டதற்கு, ”பக்கிரிசாமி… ஸ்கூல் தாளாளர் நான்தான், விருத்தாசலம் நகர்மன்ற 30வது வார்டு திமுக கவுன்சிலர்” என்றார். பள்ளியில் எத்தனை குழந்தைகள் படிக்கிறது? என்ற கேள்விக்கு, ”94 பேர், ஆசிரியர்கள் ஆறு பேர்” என்றார்.

dmk councilor arrested

’அதில் யாரும் ஆண் ஆசிரியர்கள் இல்லையா? என்று கேட்டபோது ”இல்லை நான் மட்டும்தான் ஆண் ஆசிரியர்” என்று சொல்லியிருக்கிறார்.

உனக்குத் திருமணமாகிவிட்டதா? என்றதற்கு ”திருமணமாகி ஐந்து பெண் குழந்தைகள். அதில் மூன்று பெண் குழந்தைக்குத் திருமணமாகிவிட்டது. இன்னும் இரண்டு பிள்ளைகளுக்குத் திருமணமாகவில்லை” என்று பக்கிரிசாமி சொல்ல… இதனைக் கேட்டதும் கோபம் அடைந்தனர் விசாரணை அதிகாரிகள்.

‘உன் பேத்தி வயசுள்ள குழந்தைய இப்படியா பண்ணுவ? 63 வயசுல இந்த குழந்தையை இப்படி வெறித்தனமா குதறியிருக்கிற நீ, அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது கிராமத்துப் பிள்ளைகளை என்னென்ன கொடுமைகள் செய்திருப்பே’ என்று கேட்டு பக்கிரிசாமியை நன்றாக ’கவனித்துள்ளனர்.’

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடமும் விசாரணை அதிகாரிகள் விசாரித்தனர். அவர் கூறுகையில், “வீட்டுக்காரர் சென்னையில் டாக்சி ஓட்டுகிறார், எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை, ஆறு வயது குழந்தைதான் யூகேஜி படிக்கிறது. இந்த குழந்தையைத்தான் இப்படி கொடுமை செய்து வைத்திருக்கிறான்” என்று கதறி அழுதுள்ளார்.

இந்த தகவல்களை அறிந்த அதிமுகவைச் சேர்ந்த சுமார் 20 பேர் இன்று காலை 8 மணிக்கு வீடியோ கேமராக்களுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது பணியிலிருந்த முதுநிலை மருத்துவ அதிகாரி எழில், ”ட்ரீட்மென்ட்ல இருக்கும்போது இப்படி கூட்டமாக வரக்கூடாது. குழந்தைக்கு இன்ஃபெக்‌ஷன் ஆகும். அதனால் பார்க்க அனுமதிக்கமாட்டோம்.” என்றார். அதனால் மருத்துவ அதிகாரிக்கும் அதிமுகவினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக கவுன்சிலர் கைது

அதன் பிறகு தலைமையின் ஆலோசனைபடி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய ஆயத்தமானார்கள். இதற்கிடையே தகவல் உளவுத்துறை மூலமாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதும்… பக்கிரிசாமியை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதை அறிந்த அதிமுக தலைமை, போராட்டத்தைக் கைவிடச் சொல்லி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டதால், விருத்தாசலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்குத் தயாரானவர்கள் கலைந்து போனார்கள்.

சாதி டென்ஷன்?

எனினும் பள்ளி தாளாளர், பாதிக்கப்பட்ட குழந்தை ஆகியோர் இந்தப் பகுதியிலே அவ்வபோது உரசிக் கொள்ளும் வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதன் மூலம் பிரச்சினை நடக்காமல் இருக்க விருத்தாசலம் நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுக் கண்காணித்து வருகின்றனர்.

dmk councilor arrested

இது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 12) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம், எடுப்போம்’ என்று உறுதியளித்தார்.

வரும் ஏப்ரல் 17ஆம் தேதி தேர்வு நடைபெறவிருக்கும் நேரத்தில் வைத்தியலிங்கம் பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளது. அங்கு படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி அவர்களை அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து தேர்வு நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக சொல்கிறார்கள் அதிகாரிகள்.

எத்தனை போக்சோக்கள் வந்தாலும் இதுபோன்ற காமப் பிசாசுகள் திருந்த மாட்டார்களா?

வணங்காமுடி

கலாஷேத்ரா : மனித உரிமை ஆணைய விசாரணை தொடங்கியது

பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது: அண்ணாமலை கண்டனம்!

+1
0
+1
0
+1
4
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *