பெரம்பலூரில் கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது ஆட்சியர் அலுவலகமே அதிரும் அளவுக்கு திமுகவினர் நடத்திய அராஜகம் மக்களை அதிர வைத்திருக்கிறது.
கல்குவாரி தொழில் கொடிகட்டி பறக்கும் மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. கோடிகள் கொட்டும் தொழில் என்பதால் அங்கு கடும் போட்டியும் நிலவுகிறது.
இந்தநிலையில் எளம்பலூர், செங்குணம், நாரணமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள 31 கனிம வளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏல விண்ணப்பங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அக்டோபர் 30ஆம் தேதி பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் அறையில் விண்ணப்பம் பெறுவதற்கான பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – போர்க்களம்!
நேற்று காலையில் கல்குவாரி குத்தகை ஏலத்துக்கு தங்களது விண்ணப்பங்களை தாக்கல் செய்ய பலர் வந்திருந்தனர்.
கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வன் மற்றும் முருகேசன் தங்களது விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வந்த போது, ஒருகும்பல் அவர்களை தடுத்தது.
ஆனால் கலைசெல்வன் தரப்பினர் விண்ணப்பம் தாக்கல் செய்ய சுரங்கத்துறை உதவி இயக்குனர் அறைக்குள் சென்ற நிலையில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் அதிகாரிகள் முன்னிலையிலேயே கடுமையாக தாக்கியது.
இதனை தடுக்க வந்த சுரங்கத்துறை அதிகாரிகளும், போலீசாரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். செய்தியாளர்களும் தாக்கப்பட்டு அவர்களது செல்போன்களும் பறிக்கப்பட்டன.
இந்த மோதலால் அங்கிருந்த மேஜை, நாற்காலி, ஆவணங்கள் எல்லாம் நாலாப்பக்கமும் சிதறியது..
தகவலறிந்து அங்கு வந்த ஆட்சியர் கற்பகம் உத்தரவின் பேரில், அங்கு வந்தார் மாவட்ட எஸ்பி சியாமளா தேவி. அதன்பிறகு மோதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நடைபெறவிருந்த ஏலத்தை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்திவைப்பதாக ஆட்சியர் அறிவித்தார்.
திங்கள் கிழமை என்பதால் வழக்கமாக நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட இந்த மோதலால் அச்சமடைந்தனர்.
கல்குவாரி ஏலம் ஒத்திவைப்பு!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலைசெல்வன், “நாங்கள் விண்ணப்பம் தாக்கல் செய்ய வந்தபோது, எங்களை தடுத்தனர். ’இதெல்லாம் அராஜகம்’ என்று கூறி சுரங்கத்துறை உதவி இயக்குனர் அறைக்குள் நாங்கள் நுழைந்தபோது, எங்களை வெளியே இழுத்து தள்ளி மனுவை கிழித்துபோட்டு கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டனர்” என்றார்.
அத்துமீறி தகராறில் ஈடுபட்டதாக 10 பேர் மீது கொலை முயற்சி, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பெரம்பலூர் வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிடத் தயாரா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள் என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுக-வினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (30.10.2023), கல்குவாரிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போக்குவரத்து மந்திரியின் உதவியாளர் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல்துறை உயர் அதிகாரியும், முதலமைச்சர் ஸ்டாலினும், பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிடத் தயாரா?
30.10.2023 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைசெல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுக ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த, கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து எச்சரிக்கை விடுத்த பிறகும், திமுக ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும். உடனடியாக, ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக ரவுடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கேரளா குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!