கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமாரும், கர்நாடக அரசை சார்ந்த 15 அதிகாரிகளும் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக இன்று (செப்டம்பர் 3) காலை சென்னைக்கு வருகை தந்தனர்.
முதலில் அண்ணா நகர் மண்டலம், சேத்துப்பட்டில் உள்ள ஈரக்கழிவுகளிலிருந்து இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தினைப் பார்வையிட்டனர்.
பின்னர் மாதவரம் மண்டலம், மாதவரம் இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தினைப் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் அவருடன், கர்நாடக மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உமா சங்கர், பெங்களூரு மாநகர ஆணையாளர் துஷார் கிரி நாத், கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் செயலாளர் ராஜேந்திர சோழன், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் மருத்துவர் சந்திர பானு ரெட்டி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார் மற்றும் பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவக்குமார் “கடந்த ஒரு வருடமாகச் சென்னையின் திடக்கழிவு மேலாண்மையைப் பார்வையிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது.
கர்நாடகாவிலும் இது போன்ற திடக்கழிவு மேலாண்மை செய்து வருகிறோம். இன்னும் கூடுதலாக கற்றுக்கொள்ளத்தான் சென்னைக்கு நானும், என்னுடன் 15 அதிகாரிகளும் வந்துள்ளனர்” என்றார்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், மேகதாதுவில் அணை கட்டபோவதாக சொல்லிக்கொண்டிருப்பதை பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு அவர் “ நான் தற்போது இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. இந்த ஆண்டு இதுவரை நல்ல மழை பெய்திருப்பதால் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் தண்ணீர் பிரச்சினை இல்லை. மேலும், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் அது தமிழ்நாடு மக்களுக்கும் உதவும்” என்று பதிலளித்தார்.
பின்னர், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் டி.கே.சிவகுமார் சந்தித்தார். செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறுகையில், இந்த சந்திப்பானது நட்பு ரீதியானது என்றும் கூட்டணி கட்சி என்பதால் அமைச்சர் உதயநிதியை சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நிதி மோசடி வழக்கு… தேவநாதனுக்கு செப்டம்பர் 17 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
ரேஷன் கடையில் நவீன கொள்ளை… வாங்காத பொருளுக்கு வாங்கியதாக பதிவு!
எதிர் அணி வீரரை கடித்து வைத்த உருகுவே சவுரஸ்… கால்பந்து விளையாட்டுக்கு முழுக்கு!