தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்ததிலிருந்து புறப்பட்டுச் செல்லும் என்ற விவரத்தைப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புபவர்களுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று (அக்டோபர் 10) தெரிவித்தார்.
அதன்படி, அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 4,218 சிறப்புப் பேருந்துகள்,
பிற ஊர்களிலிருந்து 6,370 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 16,888 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்புப் பேருந்துகள் புறப்படும் நிலையங்கள்
எந்தெந்த பேருந்து நிறுத்திலிருந்து பேருந்துகள் புறப்படும் என்ற அறிவிப்பையும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

ஈசிஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
திண்டிவனம் வழியாகக் கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
திண்டிவனம் வழியாகத் திருவண்ணாமலை, பண்ருட்டி, நெய்வேலி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், வடலூர் மற்றும்,
செஞ்சி வழியாக போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள் தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், செல்லும் பேருந்துகள் மற்றும்,
திருத்தணி வழியாகத் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல்,
விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
மாநகரப் பேருந்துகள்
மேற்கண்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்ல, பொதுமக்களின் வசதிக்காகப் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்
அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான அரசு பேருந்துகள் மட்டும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங் ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.
மற்ற வாகனங்கள்
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதைத் தவிர்த்து, திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாகச் செல்லுமாறு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மோனிஷா
கனிமொழியை வாழ்த்திய உதயநிதி: கருப்பு சோபாவில் இருந்து கண்ட கலைஞர்
தீபாவளி: எத்தனைச சிறப்புப் பேருந்துகள்?