கையில் போனஸ், கடைகளில் தள்ளுபடி என்று தீபாவளி நெருங்க நெருங்க பலருக்கும் ஷாப்பிங் மனநிலை வந்துவிடும். ‘ரொம்ப நாள் வாங்கணும்னு ஆசைப்பட்ட சாமான்களையும் இந்த தீபாவளி ஆஃபர்ல வாங்கிடணும்’… என்கிற ஆசையும் அதிகரிக்கும். அதற்கு முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
மிக்ஸி, கிரைண்டர், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் பயன்பாடு இல்லாத வீடே இல்லை. சிலர் இந்தப் பொருட்களை அவற்றின் ஆயுட்காலம் முடியும் வரை பயன்படுத்த விரும்புவார்கள். ஆனால் சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் இவற்றை மாற்றி புதிதாக வாங்கிவிடுவார்கள்.
எதுவாக இருந்தாலும் வாங்குவதற்கு முன்பு நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்களிடம் அவர்கள் பயன்படுத்தும் பிராண்டு பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பயன்படுத்துபவர்களின் நேரடி அனுபவம் சில பயனுள்ள தகவல்களைத் தரக்கூடும்.
வீட்டு உபயோகப் பொருள்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் நீண்ட நாள் பயன்பாட்டுக்குத்தான் வாங்குவார்கள் என்பதால் அதை ஆன்லைனில் வாங்குவதைவிட நேரடியாகச் சென்று பார்த்து வாங்குவது நல்லது. அதற்கு முன்பு ஆன்லைன் ரெவ்யூக்களை படித்துவிட்டுச் சென்றால் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற உதவியாக இருக்கும்.
சிலர் விளம்பரங்களைப் பார்த்து ஆசைப்பட்டு அதிக விலையைக் கொடுத்து அதிக எண்ணிக்கையில் ஜார்கள் இருக்கும் மிக்ஸர் கிரைண்டரை வாங்குவார்கள். ஆனால், அது வாங்கிய நாளில் இருந்து பயன்படுத்தப்படாமலேயே இருக்கும்.
எனவே, நம் அன்றாடப் பயன்பாட்டுக்கு உதவுமா என்று ஆலோசித்து, தேவைப்பட்டால் அதை வாங்கலாம். இல்லையென்றால் குறைவான ஜார்கள் இருக்கும் மாடலையே தேர்ந்தெடுக்கலாம்.
கடைகளில் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கும்போது அவற்றை இன்ஸ்டால் செய்வதற்கு அந்த குறிப்பிட்ட பிராண்டுகளின் பிரதிநிதி அல்லது வாங்கும் கடைகளில் இருக்கும் ஊழியர்களை வைத்தே செய்து கொள்வது நல்லது.
அவர்கள் இந்தப் பொருள்களை இன்ஸ்டால் செய்வது பற்றிய பயிற்சியுடன் இருப்பார்கள். இன்ஸ்டால் செய்யும்போது ஏதேனும் குறைபாடு இருந்தாலோ, இன்ஸ்டால் செய்யும்போது ஏதாவது உடைந்துவிட்டாலோ அதை உடனடியாக மாற்றி புதிய பொருள் கொடுக்க முடியும்.
தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லது வீட்டுக்கு அருகிலிருப்போரை அழைத்து இன்ஸ்டால் செய்யும்போது அதில் ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அதற்கு அந்நிறுவனம் பொறுப்பேற்காது.
கடைகளில் பொருட்களை வாங்கச் செல்லும்போது நமக்கு என்ன பொருள், என்ன பிராண்டு தேவை, அதில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவுடன் செல்வது நல்லது.
காரணம், கடைகளில் ஒவ்வொரு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் தங்களுடைய பிராண்டை உயர்த்திச் சொல்லி, நம்மைக் குழப்ப வாய்ப்புள்ளது.
நாம் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப அந்தப் பொருளின் தரம் உள்ளதா, சேதம் அடைய, துருப்பிடிக்க வாய்ப்புள்ளதா, வாரன்டி, மின்சார பயன்பாடு குறைவாக இருக்குமா உள்ளிட்டவற்றையும் செக் செய்வது நல்லது.
நமது வீட்டில் உள்ள இடத்தில் அந்த பொருள்கள் பொருந்துமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, பொருள்களை வாங்கச் செல்வதற்கு முன்பு அந்த இடத்தை அளந்து பார்த்துவிட்டுச் செல்வது நல்லது.
இடத்தைவிட பொருளின் அளவு பெரிதாகவோ, சிறிதாகவோ இருந்து விட்டால் அந்த இடத்தில் பொருத்துவதில் பிரச்னை ஏற்படும்.
பண்டிகைக் காலங்களில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும். எனவே, அந்த நேரத்தில் பழைய பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருட்களை வாங்குவது நல்லது.
பொருட்களின் வாரன்டியை செக் செய்வது முக்கியமானது. சில பொருள் களுக்கு உற்பத்தி நிறுவனம் கொடுப்பதைவிட கூடுதல் வாரன்டி (Extended warranty) கொடுக்கப்படும். அதுபோன்ற பொருட்களைப் பார்த்து வாங்குவதும் நல்லது.
வாரன்டி கார்டு தொலைந்துவிட்டால், பொருளை வாங்கிய கடையில் சென்று செல்போன் எண்ணைக் கொடுத்தாலே அதை மீண்டும் வாங்கி விட முடியும். எனவே, பொருட்களை வாங்கும்போது சரியான செல்போன் எண்ணைக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கிறீர்கள்?
THANKS FOR YOUR VALUABLE INFORMATION