தீபாவளி… அவசர உதவிக்கு 1,350 ஆம்புலன்ஸ்கள் தயார்: உதயநிதி
அவசர உதவிக்கு 1,350 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள் விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இந்த தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவசரகால மேலாண்மை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், “அவசர உதவிக்கு 1,350 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி அவசர கால உதவிக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளியை ஒட்டி மூன்று நாட்களுக்கு தடையின்றி ஆம்புலன்ஸ் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை விபத்து ஏற்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் 70 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு சாதாரண நாட்களில் 12,000 தொலைபேசி அழைப்புகள் வருவது வழக்கம். தீபாவளிக்கு 20,000 தொலைபேசி அழைப்புகள் வரும் என்பதால் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஈஸி மதுரா பேடா
ரியல் ஷூட்டிங்… கிளம்பும் விஜய்
வரதட்சணை கொடுமை : 3.5 கோடி சீன இளைஞர்கள் பெண் கிடைக்காமல் தவிப்பு!
சிறை வார்டன் ஆய்வகத்தில் சிக்கிய 95 கிலோ போதைப்பொருள்!