தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் கூட்ட நெரிசலான பகுதிகள் 5 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என,
சுமார் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கொண்டு 3 அடக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதல் கவனத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து, வருகின்றனர்.
சிறப்பு கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்ச்சிகளை தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சிகளில் கண்காணிக்கும்போது,
பழைய குற்றவாளிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்தால் கண்டுபிடிக்கும் புதிய முறை கையாளப்படுகிறது.
போலீசார் ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளையும், செல்போன், பணம், நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
5 டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.
பழைய குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்காக ’எப்ஆர்எஸ்’ என்ற செல்போன் செயலி மூலம் சுமார் 100 காவல் அதிகாரிகள் சுழற்சி முறையில், குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்சப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்ற செயல்கள் நிகழாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆஜராக வனத்துறை சம்மன்!
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!