தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி, வெளியூர்களில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தீபாவளிக்கு முன்பே சனி மற்றும் ஞாயிறு (அக்டோபர் 22, 23) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை வேறு வருவதால், பலர் இன்றே (அக்டோபர் 21) பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதையொட்டி, இன்று முதல் வருகிற 23ம் தேதி வரை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில் ‘தீபாவளி: எத்தனை சிறப்புப் பேருந்துகள்?, எந்த ஊருக்குச் செல்ல எந்த பேருந்து நிலையம், தீபாவளிக்குப் பின் இயக்கப்படும் பேருந்துகள் என்கிற தலைப்புகளில் கடந்த அக்டோபர் 10ம் தேதி செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
அதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,518 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,888 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி சிறப்புப் பேருந்துகள்
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,062 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,152 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இன்று (அக்டோபர் 21) வழக்கமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், 1,437 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,765 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.
அதுபோல் நாளை (அக்டோபர் 22) வழக்கமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், 1,586 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2,620 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.
அதுபோல் வரும் 23ம் தேதி வழக்கமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், 1,195 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,985 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.
தீபாவளிக்கு பிறகான பேருந்துகள்
தீபாவளிக்கு பிறகு வரும் 24ம் தேதி வழக்கமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.
அதுபோல் 25ம் தேதி வழக்கமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1678 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 2,080 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.
அதுபோல் வரும் 26ம் தேதி வழக்கமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 854 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 1,130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
சிறப்பு பேருந்து நிலையங்கள்
தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று முதல், செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
ஈசிஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
திண்டிவனம் வழியாகக் கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
திண்டிவனம் வழியாகத் திருவண்ணாமலை பண்ருட்டி, நெய்வேலி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், வடலூர் மற்றும், செஞ்சி வழியாக போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி செல்லும் பேருந்துகள் தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், செல்லும் பேருந்துகள் மற்றும், திருத்தணி வழியாகத் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
கோயம்பேட்டிலிருந்து செல்லும் பேருந்துகள்
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் எனப் போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
போக்குவரத்து விதிமீறல் அரசாணை: நாராயணன் திருப்பதி வரவேற்பு!
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டது ஏன்?