தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் இன்று (நவம்பர் 3) சென்னை திரும்புவதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ், கார், இருசக்கர வாகனங்கள் மூலம் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்தனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை (நவம்பர் 4) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது. இந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை நோக்கி பஸ், கார், இருசக்கர வாகனங்களில் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதன்காரணமாக, பரனூர் சுங்கச்சாவடி, வண்டலூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மீஞ்சூர் – வண்டலூர் பைபாஸ் சாலை மற்றும் மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுவே முதல்முறை… 19 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு – ஆளுநர் பெருமிதம்!