திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக துணை நடிகை திவ்யபாரதி மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, அதில் தனது கவிதைகளை வீடியோவாக வெளியிட்டு வந்துள்ளார். அந்த வீடியோக்களில் நடிப்பதற்காக நடிகையரைத் தேடியிருக்கிறார்.
அப்போது அதே திண்டுக்கல் தாடிக்கொம்புவை சேர்ந்த திவ்யபாரதி என்பவர், தாம் சினிமாவில் துணை நடிகையாக இருப்பதாகவும், விளம்பர படங்களில் நடித்துவருவதாகவும் ஆனந்த்ராஜிடம் சொல்லி அறிமுகமாகி இருக்கிறார்.
இதையடுத்து, ஆனந்த்ராஜும் திவ்யபாரதியை நடிக்கவைத்திருக்கிறார். இதற்கிடையே இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மலர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து குடும்பம் சகிதமாக திவ்யபாரதி, ஆனந்தராஜ் வீட்டில் போய் தங்கியுள்ளார். ஒருகட்டத்தில் ஆனந்த்ராஜ் பணம் காய்க்கும் மரம் என நன்றாக தெரிந்துகொண்ட திவ்யபாரதி, திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அதற்கு ஆனந்தராஜிடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் பெற்றிருக்கிறார்.
மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவச் செலவிற்காக பணம் வேண்டும் எனவும் 9 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளார். தன் வருங்கால மனைவிக்குத்தானே கொடுக்கிறோம் என அவரும் வீட்டில் இருந்த திவ்யபாரதி கேட்கும்போதெல்லாம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், திவ்யபாரதியை திருமணம் செய்துகொள்ள ஆனந்தராஜ் விரும்பியுள்ளார். இதற்காக அவர் தனது பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றுள்ளார். திவ்யபாரதியும் ஆனந்தராஜை திருமணம் செய்துகொள்ள சம்மதித்துள்ளார்.
ஆனால், அவரை கல்யாணம் செய்யாமல் காலம் தாழ்த்திவந்துள்ளார். அத்துடன், அவரிடம் சண்டை போடத் தொடங்கி ஆனந்தராஜை அவாய்டு செய்யவும் ஆரம்பித்துள்ளார். திவ்யபாரதி.
இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தராஜ் அதற்குப் பிறகுதான் திவ்யபாரதியை பற்றி விசாரித்திருக்கிறார். அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
திவ்யபாரதியால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதைப் புரிந்துகொண்ட ஆனந்த்ராஜ், அதன்பிறகு தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், மாவட்ட கண்காளிப்பாளரிடம் புகார் அளித்தார்.
யூடியூபர் ஆனந்த்ராஜ் பேட்டி
இதுகுறித்து பாதிக்கப்பட்ட யூடியூபர் ஆனந்த்ராஜ், “யூடியூப்புக்காக கவிதை ஷூட் எடுத்தேன். அதில் நடிப்பதற்காக திவ்யபாரதி வந்தார். அவருக்கு நானும் சான்ஸ் கொடுத்தேன்.
அவர் அறிமுகமான 2வது நாளே, ‘என்னிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்றார். ’நான் கஷ்டப்படுகிறேன். தொடர்ந்து எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்றார். என் செல்போன் நம்பரைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து என்னிடம் பேச ஆரம்பித்தார்.
அவர், தன் அக்கா குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்ப்பதாக கூறினார். அது முற்றிலும் பொய். அது, அவருடைய குழந்தைகளே. அவர்களை, திவ்யபாரதிதான் வளர்க்கிறார். ஒருமுறை அவருடைய பெரிய குழந்தை, திவ்யபாரதியை ‘அம்மா’ என அழைத்தது.
அதற்கு நான், ‘உன்னை அம்மா என அந்தக் குழந்தை கூப்பிடுகிறதே’ எனக் கேட்டேன். அதற்கு அவர், ’சிறுகுழந்தையிலிருந்து அதை நான் வளர்ப்பதால் என்னை அம்மா என்றுதான் அது கூப்பிடும்’ என்றார். அதன்பிறகு, நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறினார்.
அதை நம்பி நானும் ஏமாந்துவிட்டேன். பணமாக இதுவரை 20 லட்சம் ரூபாயாகவும், நகை மற்றும் பொருட்கள் மூலம் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். அவர் ஷூட்டிங் சமயத்தில், தம்மை ஏழைப் பெண் என்று கூறியதால், நானும் அவர் மீது பரிதாபப்பட்டு பணம் கொடுத்தேன்.
கடைசியில் பார்த்தால் அவர் மோசடிப் பேர்வழி. இதையடுத்து காவல் துறையில் புகார் அளித்துள்ளேன். மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்” என்றார்.
இதுதொடர்பாக மாவட்டக் குற்றப்பதிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நடத்திய விசாரணையில், யூடியூப் சேனலுக்காக தாம் நடித்துக் கொடுத்ததாகவும், அதற்காக பணம் பெற்றதாகவும் திவ்யபாரதி போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது தாங்கள் வரவேண்டும் என போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர்
ஜெ.பிரகாஷ்
எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை : புறக்கணிக்கப்படுகிறாரா அறிவு..? பாடகி தீ விளக்கம்!