தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைப்பதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின.
இது தொடர்பாக விசாரணை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகக் காவல்துறை இந்த வீடியோக்கள் எல்லாம் போலியானது என்று விளக்கம் தெரிவித்தது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்து அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு செய்து சென்றனர்.
இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ பரப்பிய விவகாரத்தில் பீகார் யூடியூபர் மனிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது தமிழகம் மற்றும் பீகாரில் மொத்தம் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசியப் பாதுகாப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்தது.
இந்நிலையில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும், மற்ற வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரிக்கக் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மனிஷ் காஷ்யப் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (மே 8) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனிஷ் காஷ்யப் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தின் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் எது வேண்டுமானாலும் பரப்பிவிடுவதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறினர்.
இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தை ஏன் அணுகக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
பிரியா
பிளஸ் 2 ரிசல்ட்: எந்த மாவட்டம் முதலிடம்?
பிளஸ் 2 ரிசல்ட்: அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!