நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டப் பொருட்களான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் திட்டம் சேலத்தில் நேற்று (ஆகஸ்ட் 1) தொடங்கப்பட்ட நிலையில், 234 தொகுதிகளிலும் தலா ஒரு கடைக்கு சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் 36,954 நியாயவிலைக் கடைகள் மூலம் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவை இலவசமாகவும், சர்க்கரை, மண்ணெண்ணெய் மானிய விலையிலும், சிறப்புப் பொது விநியோகத்திட்ட பொருட்களான பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இந்தப் பொருட்களில் பாமாயில் மட்டும் பாக்கெட்டில் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை குடும்ப அட்டைதாரர்கள் கொண்டு வரும் பைகளில் மின் தராசு மூலம் எடையிடப்பட்டு வழங்கப்படுகிறது.
இவ்வாறாக வழங்கப்படும்போது எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
இந்தப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொது விநியோகத் திட்ட பொருட்களை பாக்கெட்டில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் முதல் கட்டமாக, சேலம் மாவட்டம் ஸ்ரீரங்கபாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் இந்த திட்டம் நேற்று (ஆகஸ்ட் 1) தொடங்கப்பட்டது.
இந்தக் கடையில், தலா ஒரு கிலோ எடையில் துவரம் பருப்பு, சர்க்கரை அரை கிலோ முதல் பல்வேறு அளவுகளில் பிளாஸ்டிக் கவர்களிலும், அரிசி 10 கிலோ முதல் பிளாஸ்டிக் சாக்குப்பைகளிலும் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வந்து கேட்கும் போது எடைக்கேற்ற பை எடுத்து தரப்படுகிறது.
முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு கடை தேர்வு செய்யப்பட்டு அந்தக் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.
பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் மற்ற கடைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த கூட்டுறவு, உணவுத் துறைகள் முடிவெடுத்துள்ளன.
இது தொடர்பாக, பேசியுள்ள நியாயவிலைக் கடை பணியாளர்கள், ‘‘தற்போது துறையின் சார்பில் பாக்கெட்களாக பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையே தொடர்ந்தால், எடை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவி்ப்பது தவிர்க்கப்படும். எங்களுக்கும் சிரமம் இருக்காது’’ என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ஃப்ரெஷ் கோகனட் பிஸ்தா க்ரீம் வித் ஹோல் ஸ்ட்ராபெர்ரி
உசுரே நீ தானே… நீ தானே: அப்டேட் குமாரு
TNSTC தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு!
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வாங்கலையா? – உங்களுக்கு கடைசி சான்ஸ்!