கடலூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் செந்தில் செல்லம் என்ற திரைப்பட இயக்குனர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதற்காக நேற்று பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. போலீசார் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டதாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பேனர்களும் அகற்றப்பட்டன.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 14) பிற்பகல் புதுப்பாளையம் பகுதியில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் குவிந்ததுடன் இரண்டு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் உடன் வந்தவர்களை வாகனங்களை எடுத்து சென்று அப்புறப்படுத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்டனர், ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. போலீசார் உடனே வந்தவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இயக்கிய பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், டிடிஎஃப் வாசனை சந்திப்பதற்காக வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த சுமார் 300 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இது போன்ற வழக்குகள் பதிவாவது இது புதிதல்ல.
அண்மையில் 242 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டியதற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்