அம்பேத்கர் நினைவு நாளில் நடந்த ஆணவப்படுகொலை! 

Published On:

| By christopher

அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) காலையில் நெல்லையில் நடந்தேறியுள்ள நடுங்க வைக்கும் ஆணவப்படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமாக சாதி மோதல்கள் மற்றும் கொலைகள் தொடர்ந்து நிகழக்கூடிய மாவட்டமாக நெல்லை மாவட்டம் உள்ளது.

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜவல்லிபுரத்தில் வசித்து வந்தவர் பொன்னுத்தாய் (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாழையூத்தில் வசிக்கும் சரவணதாஜ் (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்தார்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் ஒன்றாக கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள பிரிட்டானியா கம்பெனியில் வேலை செய்து வந்தனர். சமீபத்தில் பொன்னுத்தாய் – சரவணதாஜ் இருவரும் ரகசியமாக கோயிலில் திருமணமும் செய்துகொண்டு மறைமுகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கை பொன்னுத்தாயின் காதல் திருமணம் அவரது சகோதரர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் உடன் பிறந்த சகோதரி என்றும் பாராமல் பொன்னுத்தாயை இன்று காலையில் கத்தியால் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கொலை செய்த பொன்னுத்தாய் சகோதரர்களில் இருவரை பிடித்து தாழையூத்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதைப்பற்றி காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “பொன்னுத்தாயை கொலை செய்த அவரது சகோதரர்களை பிடித்து விசாரித்து வருகிறோம், அதனால் இப்போது எதுவும் சொல்லமுடியாது. விசாரணை முடிந்த பிறகு விரிவாக சொல்கிறோம். தற்போது விசாரணையில் பிசியாக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

<

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தொகுதியான திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தற்போது ஆணவப்படுகொலை நடந்துள்ளது.

அதுவும் அம்பேத்கர் நினைவு நாளில் திட்டமிட்டு ஆணவப்படுகொலை செய்திருப்பது பின்னணியில் ஏதோ சதிகாரக்கூட்டம் இருப்பதாக சொல்கிறார்கள் காவல்துறையினர்.

தென்மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக சாதி ரீதியான தாக்குதல்கள் மற்றும் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நெல்லையில் நடந்துள்ள இந்த ஆணவப்படுகொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.<

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி  

தேங்கி நிற்கும் மழைநீர்… நெருங்கும் ஆபத்து: அன்புமணி எச்சரிக்கை!

“நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கவில்லை”: கங்குலி