கனமழை வார்னிங்… மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!
தமிழகத்தில் நாளை (டிசம்பர் 10) முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்செரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (டிசம்பர் 9) வெளியிட்ட அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். மேலும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தமிழக கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.
இதன்காரணமாக, டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை குறிப்பிட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ள உத்தரவில்,
“பேரிடரை எதிர்கொள்வதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து அரசு இயந்திரங்களும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட வேண்டும். அசம்பாவிதங்கள் எதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை Vs ஆர்.எஸ்.பாரதி: தீவிரமாகும் மோதல்!
டாப் 10 நியூஸ்: முதலீட்டு உச்சி மாநாட்டில் மோடி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரை!