அலங்காநல்லூர் செல்லும் ஸ்டாலின் : அமீர் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழகம்

தமிழ்நாட்டில் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்த நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

தமிழர் மரபு, பாரம்பரிய விளையாட்டு என கூறி மாநில அரசே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு சட்டபூர்வமான அனுமதியை நிரந்தரமாக நீதிமன்ற உத்தரவு மூலம் பெற்றுள்ளது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு சம்பிரதாய விழா தற்போது ஜல்லிக்கட்டு போட்டியாக மாறி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எங்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதை காட்டிலும் தமிழ்நாடு அரசில் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை வழங்குமாறு கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த வருடம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம்பெற்ற பிரபாகரன் பரிசை பெற்ற பின் செய்தியாளர்களிடம் அழுத்தமாகவே வேலைவாய்ப்பு கோரிக்கையை முன்வைத்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி மாடுபிடி வீரரர்களின் வேலைவாய்ப்பு கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் அமீர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்..”

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்”  என அமீர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல்’ : நீதிமன்றம் செல்வாரா அபிசித்தர்?

சாதனைகளை அடித்து நொறுக்கிய ‘ரோகித் சர்மா’: பட்டியல் இதோ!

கடும் போட்டி: சாம்சங்கை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்தது ஆப்பிள்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *