திண்டுக்கல் தீ விபத்து… திக் திக் நிமிடங்களை சொல்லும் தீயணைப்பு வீரர்
திண்டுக்கல் – திருச்சி ரோடு, நேருஜி நகர் மேம்பாலம் அருகில் காந்தி நகரில் உள்ள பிரபலமான, எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனை 4 தளங்களை கொண்டது. இந்த மருத்துவமனையில் நேற்றிரவு (டிசம்பர் 12) ஏற்பட்ட விபத்தில் மூச்சு திணறி 6 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/WhatsApp-Image-2024-12-13-at-3.30.14-PM-1-1024x600.jpeg)
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தின் பதறவைக்கும் காட்சிகளை, களத்தில் இருந்த தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் மின்னம்பலத்திடம் பகிர்ந்துகொண்டார்.
“நேற்று (12.12.2024) இரவு 9.26 மணிக்கு தீயணைப்பு அலுவலகத்துக்கு மருத்துவமனையில் இருந்து போன் கால் வந்தது. அதில் பேசியவர்கள், மருத்துவமனையில் தீ பற்றி எரிவதாகவும், விரைவில் வருமாறும் கூறினர்.
சுமார் 3 கிமீ தூரத்தில் இருந்த மருத்துவமனைக்கு 4 நிமிடங்களில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வசதியுடன் கூடிய தீயணைப்பு வாகனத்தில் சென்றோம்.
அங்கு ஒரே புகைப்படலமாக இருந்தது.
அடுத்ததாக 5 ஆயிரம் லிட்டர் கொண்ட தீயணைப்பு வாகனங்கள் அடுத்தடுத்து இரண்டு வந்தது. நான்காவதாக அனைத்து உபகரணங்களுடன் கூடிய தீயணைப்பு வாகனம் வந்தது.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/CjPtYs9M-hospital-fire-1024x576.jpg)
அதில், கட்டிங் மிஷின், ஏணி உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் இருக்கும். விபத்து குறித்து தகவல் அறிந்து சுமார் 50 ஆம்புலன்ஸ்களை காவல்துறையினர் வரவழைத்தனர். மொத்தம் 4 தீயணைப்பு வாகனங்கள், 38 பேர் களத்தில் இறங்கினோம்.
கீழ்தளத்தின் உள்ளே முன்னோக்கி செல்லும் போது, லிப்ட் அருகில் ஒருவர் விழுந்து கிடந்தார். அவரை தூக்கி பார்க்கும் போது நாடி துடிப்பும், சுவாசமும் இருந்தது.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
லிப்ட் கதவு லேசாக திறக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து மூச்சு திணறல் சத்தம் கேட்டதும், உடனடியாக எங்கள் வீரர்கள், எங்களுடைய டூல்ஸை கொண்டு லிப்ட் கதவை திறந்தனர்.
உள்ளே, ஒருவர் மூச்சு திணறலால் துடித்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் ஒருவருக்கு ஒருவர் மீது சாய்ந்துகொண்டு கிடந்தனர்.
அனைவரையும் மீட்டு அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதில் 6 பேர் இறந்துவிட்டனர் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
தொடர்ந்து, மருத்துவமனையின் அடுத்தடுத்த தளங்களில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்கள், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகள், கட்டுப்போட்டுக்கொண்டு பெட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், அவர்களின் அட்டெண்டர்கள் என அனைவரும், ‘எங்களை காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…’ என்று கதறினர்.
தரை தளத்தில் இருந்து மேல் தளம் வரை ஒரே அலறல் சத்தமாக இருந்தது. புகை மண்டலமாக இருந்ததாலும்,வெளிச்சம் இல்லாததாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கை, கால்களில் ஆபரேஷன் செல்லப்பட்ட சில நோயாளிகள் அசைய கூட முடியாமல் வலியோடு உயிர் பயத்தில் கத்தி கதறி துடித்தனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Tamil-Nadu-Fire-1734026170403-1024x576.webp)
இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு மாடியாக முன்னேறிச் சென்று மருத்துவமனையில் இருந்த ஸ்ட்ரெச்சர், எங்களிடம் இருந்த ஸ்ட்ரெச்சர் மூலமாக அங்கிருந்தவர்களை மீட்டனர். சுமார் 2.30 மணி நேரம் போராடி 6 பேரை தவிர மற்றவர்களை உயிரோடு காப்பற்றினோம். அந்த 6 பேரின் உடல்கள் மார்ச்சூரியில் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தால், பேரிடர் மீட்பு குழுவின் மாவட்ட இன்சார்ஜ் விசாகன் ஐஏஎஸ் நேற்றிரவு ஒரு மீட்டிங் நடத்தினார்.
அதில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, தீயணைப்புத் துறை மாவட்ட அதிகாரி கணேசன், கூடுதல் மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி மயில்சாமி கலந்துகொண்டனர்.
அப்போது மருத்துவமனை தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும், அனைத்து அதிகாரிகளும் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர் ” என்றார். அவரிடம் இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன என்று கேட்டோம்.
“இந்த மருத்துவமனையில் இதற்கு முன் சிலமுறை எலக்ட்ரிக் ஸ்பார்க் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள். மழைக்காலம் என்பதால் வயரிங் பிரச்சினையால், ஸ்விட்ச் போர்டு அருகே ஸ்பார்க் ஏற்பட்டு அதன்மூலமாகத்தான் தீ ஏற்பட்டிருக்கிறது.
இதனால் ஏற்பட்ட புகைமண்டலம், ஒரு கிமீ சுற்று பரப்பளவில் பரவல் இருந்தது. இந்த சம்பவம் திண்டுக்கல்லையே பதற வைத்துள்ளது” என கூறினார்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
டங்ஸ்டன் சுரங்கம்… ஒரு பிடி மண்ணைக் கூட தொட முடியாது… சீமான் ஆவேசம்!
‘புஷ்பா 2’ பார்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… அல்லு அர்ஜூன் செய்த உதவி!