சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு பால்ய திருமணம் நடக்கவில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் கூறியிருக்கும் நிலையில், திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் மின்னம்பலத்துக்கு கிடைத்துள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த மே 4ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறியிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
குழந்தை திருமணங்கள் நடக்காத போதிலும், அப்படி திருமணம் நடத்தி வைத்ததாக 8 பொய் வழக்குகள் தீட்சிதர்கள் மீது பதியப்பட்டதாகவும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து மின்னம்பலம் புலன் விசாரணையில் இறங்கியது. இதில், குழந்தை திருமணங்கள் நடந்திருப்பது தெரியவந்தது. சிறுமி ஒருவர் முதலிரவுக்கு பால் சொம்பு எடுத்து செல்லும்படியான புகைப்படமும் நமக்கு கிடைத்தது. அதுபோன்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் விசாரித்ததில் இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என்பதும், மாறாக ஸ்வாப் டெஸ்ட் மட்டுமே எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து பால்ய திருமணம், இரு விரல் டெஸ்ட்… உண்மை என்ன? – மின்னம்பலம் புலனாய்வு ரிப்போர்ட்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனிடையே ஆளுநர் கூறிய விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோருக்கு நோட்டீசும் அனுப்பியது.
அதில், குழந்தைகள் திருமணம் நடந்ததா இல்லையா? இரு விரல் பரிசோதனை நடந்ததா இல்லையா? குழந்தைகள் திருமணம் நடந்திருந்தால் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எப்.ஐ.ஆர் பதியப்பட்டதா? என கேள்வி எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசும் தனது பதிலை அனுப்பி வைத்தது.
இந்தசூழலில் தேசிய குழந்தைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்று (மே 24) வருகை தந்தார். அங்கு பொது தீட்சிதர்களிடம் விசாரணையை நடத்தினார்.
சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், பொறுப்பு ஆட்சியர் ஆர்.ராஜசேகரன், எஸ்.பி.யான ஆர்.ராஜாராம், வழக்கு விசாரணை அதிகாரிகள், சிறுமிகளுக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சிறுமிகளின் வீடுகளுக்குச் சென்று அங்கு திருமணமான சிறுமிகளிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகரன் உடனிருந்தார்.
இந்த விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆனந்த் கூறுகையில், “இரு விரல் பரிசோதனை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இருப்பினும் சிறுமிகளின் பிறப்புறுப்பில் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது உண்மை.
அதேசமயம் குழந்தைகளிடம் பேசும் போது குழந்தை திருமணம் நடைபெறவில்லை. வற்புறுத்தி கேட்டதால் திருமணம் நடந்ததாக ஒத்துக்கொண்டோம் என கூறினார்கள்.
ஆளுநர் கூறியதை பற்றி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தலைமை செயலாளரிடம் அறிக்கை கேட்டார். அதன்படி ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை வைத்து குறுக்கு விசாரணை செய்வதற்காக இங்கு வந்தேன். தீட்சிதர்கள், காவல்துறை, பாதிக்கப்பட்ட சிறுமிகளுடன் மூன்று கட்டமாக விசாரணை நடத்தி அதனைப் பதிவுசெய்து வைத்துள்ளோம்,
அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினேன். இந்த விசாரணை அறிக்கை இரண்டு மூன்று நாட்களில் ஆணையத்தின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
மேலும் அவர், “காவல்துறை மீதோ, தீட்சிதர்கள் மீதோ எவ்விதமான கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பது பற்றி காவல்துறை அதிகாரிகளிடமும், சமூக நல அதிகாரிகள் மத்தியிலும் விசாரித்தோம்.
“2021இல் மொத்தம் 16 குழந்தைகள் திருமணம் நடைபெற்றுள்ளன. அதில் நான்கு குழந்தைகளுக்குத் திருமணம் நடந்ததற்குத்தான் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
மற்றவர்கள் மீது வழக்குத் தொடர விசாரணைக்கு ஒத்துழைக்க தீட்சிதர்கள் மறுத்து வருகிறார்கள். மேலும் வழக்கைத் திசை திருப்ப இருவிரல் பரிசோதனை நடந்ததாக மனித உரிமை ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், மகளிர் ஆணையம், கவர்னர், பிரதமர் என்று புகார் அனுப்பி அதிகாரிகளை அலைக்கழிக்க வைக்கிறார்கள்.
குழந்தை திருமணம் நடந்த போட்டோக்கள் ஆதாரம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன. குழந்தை திருமணம் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் தீட்சிதர்கள் போனிலேயே இருந்தது. இதோ பாருங்கள் ” என்று திருமணம் நடக்கும் படங்கள் மற்றும் தாலி கட்டும் படங்கள் அனைத்தையும் காட்டினர்.
மேலும், “2021 ஜனவரி 25ஆம் தேதி, 18 வயது சிறுவனுக்கும் 12 வயது சிறுமிக்கும் கீழ் வீதியில் உள்ள கோதண்டராமன் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. அதைப்பற்றி விசாரிக்க சமூக நல அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் குடும்பத்தினரை அழைத்தோம்.
அவர்கள் வைத்திருந்த செல்போனில் அனைத்து படங்களும் இருந்தன. அப்போதே அந்த சிறுமியும் அவரது தாயும் திருமணம் நடந்தது உண்மை என்று எழுதிக்கொடுத்தார்கள். இதோ பாருங்கள் அதன் நகல்” என்று நம்மிடம் காட்டினார்கள்.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் குழந்தை திருமணம் செய்தவர்கள் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு பாதுகாக்க முயற்சிப்பது வேதனையாக உள்ளது. சொல்லப்போனால் அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும்” என்றனர்.
குழந்தை திருமண விவகாரம் குறித்து மறுமலர்ச்சி வன்னியர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான கோவி.மணிவண்ணன் நம்மிடம் கூறுகையில்,
“சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வைத்து வருகிறார்கள்.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் தீட்சிதர்களைக் காப்பாற்றும் உள்நோக்கத்தில் ஆளுநர் மற்றும் மத்திய அரசின் அமைப்புகள் போராடுகின்றன. நேற்று வந்த தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாஜகவின் பிரதிநிதிகள். அவர்கள் விசாரணை எப்படி இருக்கும்? குழந்தை திருமணம் செய்த தீட்சிதர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் செயல்படுவார்கள், இதில் தமிழகக் காவல்துறை என்ன செய்யப்போகிறது, குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்று சொல்லப்போகிறதா அல்லது ஆதாரங்களுடன் குழந்தை திருமணம் செய்த 16 ஜோடிகள் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யபோகிறதா என்பதை பார்ப்போம்” என்றார்.
வணங்காமுடி, பிரியா
234 தொகுதிகளிலும்… விஜய்யின் அடுத்த மூவ்!
புதிய பயிற்சி ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ!
மத்தியில எங்களவா ஆட்சின்னா நடக்றது, மத்தவா ரூல்ஸெல்லாம் எங்களாண்டே பேஷக்கூடாது ஓய்…